WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, January 2, 2015

அக்காள் கணவர், அண்ணன் உதவியுடன் பி.டெக். படிக்கும் ஏழை மாணவனுக்கு 5 நாட்களுக்குள் கல்வி கடனை வழங்க வேண்டும் வங்கி மேலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

பி.டெக் படிக்கும் பெற்றோர் இல்லாத ஏழை மாணவனுக்கு 5 நாட்களுக்குள் கல்வி கடன் வழங்க வேண்டும் என்று வங்கி நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.முத்துகுமார். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது:-

பெற்றோர் இல்லை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். படித்து வருகிறேன். என்னுடைய பெற்றோர் இறந்துவிட்டதால், என் மூத்த சகோதரனும், அக்காள் கணவரும் என்னை படிக்க வைத்து வருகின்றனர். ஏழை குடும்பத்தை சேர்ந்த நான், காயல்பட்டினம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன் கேட்டு கடந்த 2013-ம் ஆண்டு விண்ணப்பம் செய்தேன். என் விண்ணப்பத்தை வங்கி மேலாளர் பரிசீலிக்கவில்லை. இதையடுத்து மாவட்ட கலெக்டர் முதல் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு வரை புகார் செய்தேன். பின்னர் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

அவமதிப்பு

என் மனுவை விசாரித்த இந்த ஐகோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், என்னுடைய விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலித்து, 15 நாட்களுக்குள் தகுந்த உத்தரவினை வங்கி மேலாளர் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதன்பின்னரும், என் மனு பரிசீலிக்கப்படவில்லை. எனவே, இந்த ஐகோர்ட்டு உத்தரவை வேண்டுமென்றே அவமதித்துள்ள காயல்பட்டினம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் சிதம்பரம் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

ஆவணம் இல்லை

இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கி நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல் வி.மோகன், மனுதாரர் தேவையான முக்கிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. அந்த ஆவணங்களை கொடுத்தால், அவருக்கு கடன் தொகையை வழங்க வங்கி நிர்வாகம் தயாராக உள்ளது’ என்று வாதிட்டார்.

மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ், மனுதாரர் தேவையான அனைத்து ஆவணங்களையும் கொடுத்துவிட்டார்’ என்று வாதிட்டார்.

5 நாட்களுக்குள்...

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வங்கி நிர்வாகம் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் மனுதாரர் உடனடியாக கொடுக்க வேண்டும். அந்த ஆவணங்களை பெற்றுக்கொண்டு, 5 நாட்களுக்குள் மனுதாரருக்கு கல்விக்கடன் தொகையை வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கியபின்னர், அதுதொடர்பான ‘அறிக்கையை வருகிற (ஜனவரி) 6-ந் தேதி இந்த கோர்ட்டில் வங்கி நிர்வாகம் தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.