WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 6, 2015

முறைகேட்டை தடுக்க டி.ஆர்.பி., முடிவு: தேர்வர் முன் விடைத்தாள் கட்டுக்கு 'சீல்'

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், முறைகேட்டை தடுக்க, விடைத்தாள் கட்டுகள் அடங்கிய உறையில், தேர்வர் முன், 'சீல்' வைக்கவும், இரு தேர்வர்களின் கையெழுத்தை பெறவும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்பாடு செய்துள்ளது.

டி.ஆர்.பி., அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, வரும், 10ம் தேதி, மாநிலம் முழுவதும், போட்டித் தேர்வை நடத்துகிறது. சில லட்சம் பேர், இந்த தேர்வை எழுத உள்ளனர். தேர்வு நடைமுறைகளில், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவ்வப்போது சில மாற்றங்களை, டி.ஆர்.பி., செய்து வருகிறது. அதன்படி இந்த தேர்வில், தேர்வு அறையில், மொத்தமாக சேகரிக்கப்படும் விடைத்தாள்களை, ஒரு உறையில் போட்டு, தேர்வர் முன்னிலையில் அதை, 'சீல்' வைக்கவும், இது தொடர்பாக, இரு தேர்வர்களிடம் கையெழுத்து பெறும் நடைமுறையையும் அமல்படுத்துகிறது.

இது குறித்து, மாவட்டங்களில் உள்ள கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:கடந்த தேர்வுகளில், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் (ஆப்டிக்கல் மார்க் ரீடர்), தேர்வர், தன்னுடைய பதிவு எண்ணை, 'ஷேட்' செய்யும் முறை இருந்தது. தற்போது, விடைத்தாளில், தேர்வர் பெயர், புகைப்படம், பதிவு எண், பாடம் உட்பட, அனைத்து தகவல்களும், ஏற்கனவே அச்சிடப்பட்டு இருக்கும். தேர்வர்கள், கையெழுத்து மட்டும் போட வேண்டும்; அவ்வளவு தான். கடந்த காலங்களில், ஒரு தேர்வு அறையில் இருந்து பெறப்படும் விடைத்தாள்களை, அந்த அறை கண்காணிப்பாளர், தேர்வு மையத்திற்கு எடுத்துச் சென்று, அதன்பின், 'சீல்' வைப்பார். தற்போது, தேர்வு அறையில், தேர்வர் முன், விடைத்தாள்கள் அடங்கிய உறையை, 'சீல்' வைத்து, அதற்கு சாட்சியாக, இரு தேர்வர்களிடம், கையெழுத்து வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நடைமுறை மூலம், பாதுகாப்பை மேலும் உறுதிபடுத்த முடியும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலி பணியிடங்கள் விபரம்

1 தமிழ் 277
2 ஆங்கிலம் 209
3 கணிதம் 222
4 இயற்பியல் 189
5 வேதியியல் 189
6 தாவரவியல் 95
7 விலங்கியல் 89
8 வரலாறு 198
9 பொருளியல் 177
10 வணிகவியல் 135
11 உடற்கல்வி
இயக்குனர், நிலை 127

மொத்தம் 1,807

1 comment:

  1. வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யக் கூடிய அரசுப் பணி விதி செல்லாது
    வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    எஸ்.விமல்ராஜ், ஜி.ஜோசப் தாமஸ் ரிச்சர்டு, வி.முருகையா உள்பட ஐந்து பேர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நாங்கள் 2006-08-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தோம். அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகிறது.. இதற்கு, அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) வழிவகை செய்கிறது. இந்த விதியால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். இந்த விதி அரசியலைமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இந்த விதியை ரத்து செய்ய வேண்டும், செல்லாதது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரினர்.
    இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் ஐந்து பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.ஆர்.சிவகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது.
    விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு வழக்கில், வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பதிவு மூப்பு பட்டியல் பெறுவது மட்டுமில்லாமல், இரண்டு பத்திரிகைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும். அதில், ஒன்று, அதிகம் படிக்கக் கூடிய வட்டார மொழி பத்திரிகையாக இருக்க வேண்டும். அவ்வாறு விளம்பரம் செய்து, அதன் மூலம் வரும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்தும் பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதே போன்று, சென்னை உயர் நீதிமன்றமும் ஒரு வழக்கில் கடந்த ஆண்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அரசுப் பணி விதி 10 (ஏ) வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வகை செய்கிறது. எனவே, இந்த விதியை செல்லாது என அறிவிக்கிறோம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.