WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, March 19, 2015

பிளஸ்-2 கணித பாட தேர்வில் வினா ஏற்படுத்திய குழப்பம் அரசு தேர்வுகள் இயக்குனர் விளக்கம்

பிளஸ்-2 கணித தேர்வில் வினா ஏற்படுத்திய குழப்பத்துக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார்.


கணிதம்-விலங்கியல் தேர்வு

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 5-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ-மாணவிகள் எழுதி வருகிறார்கள்.

பிளஸ்-2 தேர்வுகள் இம்மாதம் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று கணிதம் மற்றும் விலங்கியல் ஆகிய தேர்வுகள் நடைபெற்றன.

எளிதாக இருந்தது

கணித தேர்வு குறித்து எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் பள்ளியை சேர்ந்த மாணவிகள் பிரீத்திகா, பிரியங்கா ஆகியோர் கூறியதாவது:-

கணித தேர்வு வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் மற்றும் 6 மதிப்பெண் வினாக்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் எளிமையாக இருந்தது.

தவறான வினா?

10 மதிப்பெண் பிரிவில் 58-வது வினாவில் கழித்தல் குறியீடு போடுவதற்கு பதிலாக கூட்டல் குறியீடு போடப்பட்டுள்ளது. புத்தகத்தில் இதே வினா கழித்தல் குறியீடுடன் உள்ளது.

வினாத்தாளை பார்த்ததும் 58-வது கேள்வி தவறாக அச்சிடப்பட்டுள்ளதோ என்று நினைக்க தோன்றியது. பிளஸ் போட்டு விடை அளிக்கலாமா? அல்லது மைனஸ் போட்டு விடை அளிக்கலாமா? என்று குழப்பமாக இருந்தது. சில மாணவர்கள் கேள்வியில் கேட்கப்பட்டபடி பிளஸ் போட்டு விடை அளித்துள்ளனர். சிலர் மைனஸ் போட்டு விடை அளித்துள்ளனர். எது சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட குழப்பமான கேள்விகளுக்கு விடை அளிக்க முயற்சி செய்தால் முழு மதிப்பெண் அளிக்க வேண்டும்.

இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இது குறித்து கணித ஆசிரியர் கூறும்போது, இந்த கேள்வி முழுக்க முழுக்க சரியானதுதான். கணிதத்தை மனப்பாடம் செய்து எழுதும் மாணவர்களுக்கு இந்த கேள்வி குழப்பமாக இருக்கலாம். ஆனால் புரிந்து படித்த மாணவர்களுக்கு இது மிக எளிதானதாகும் என்று தெரிவித்தார்.

தேர்வு துறை

அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜனிடம் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முயற்சி செய்தால் முழு மதிப்பெண் அளிக்கப்படுமா? என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

பிளஸ்-2 கணித தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சரியானதுதான். குறிப்பாக பிரச்சினை கிளப்பிய 58-வது கேள்வி குறித்து நாங்கள் பல கணித ஆசிரியர்களிடம் கேட்டுள்ளோம். அவர்கள் அனைவரும் சரியானதுதான் என்று கூறுகிறார்கள். மைனஸ் போட்டும் கேள்வி கேட்கலாம், பிளஸ் போட்டும் கேள்வி கேட்கலாம். எனவே இந்த கேள்வி சரியானதுதான். கருணை அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்படும் கேள்வியே எழவில்லை.

இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்தார்.

விலங்கியல்

நுங்கம்பாக்கத்தில் உள்ள கிரசென்ட் பள்ளியை சேர்ந்த மாணவிகள் கீர்த்திகா சந்திரசேகர், ஆப்ரின், சுமையா மற்றும் சபா ஆகியோர் விலங்கியல் தேர்வு குறித்து கூறியதாவது:-

விலங்கியல் தேர்வு வினாக்கள் எளிதாகத்தான் இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள், 3 மதிப்பெண் வினாக்கள் ஆகியவை மிகவும் எளிதாக இருந்தது. விலங்கியல் வினாக்களை பொறுத்தமட்டில் திரும்ப, திரும்ப கேட்கப்பட்ட வினாக்கள் இல்லாமல் கடந்த ஆண்டுகளில் கேட்கப்படாத வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னால் உள்ள கேள்விகள் கேட்காமல் பெரும்பாலான வினாக்கள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தது. நாங்கள் 5 மதிப்பெண் வினாவாக எதிர்பார்த்த சில வினாக்கள் 10 மதிப்பெண் வினாக்களில் கேட்கப்பட்டிருந்தது. ஒட்டு மொத்தமாக வினாக்கள் எளிதாக இருந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.