WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, April 14, 2015

தமிழ்நாட்டில் 2 வருடத்தில் 1000 பேருக்கு போலி சான்றிதழ் விற்பனை: டெல்லியில் கும்பல் தலைவனை பிடிக்க வேட்டை!!

தமிழகம் முழுவதும் போலி கல்வி சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்த
கும்பல் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பா.ம.க. மகளிர் அணி துணை தலைவி சண்முகசுந்தரி அவரது கூட்டாளிகள் அருண்குமார், கணேஷ்பிரபு ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. வக்கீல் படிப்புக்கான எல்.எல்.பி. சான்றிதழ்கள், என்ஜினீயரிங் சான்றிதழ்கள் பாராமெடிக்கல் கோர்ஸ் சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு சண்முக சுந்தரி தயாரித்து கொடுத்திருப்பது அம்பலமானது. பார்கவுன்சிலில் வக்கீல்களாக பதிவு செய்பவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை சரிபார்த்த போது, சென்னையை சேர்ந்த அருண்குமார், அழகிரி, மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் அளித்திருந்த எல்.எல்.பி. சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் செயலாளர் தட்சிணா மூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் அதிரடியாக களத்தில் இறங்கி, இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கோவை காந்திபுரம் 3–வது தெருவில் ‘‘ஹைமார்க் எஜிகேஷன் இன்ஸ்டி டியூசன்’’ என்ற பெயரில் சண்முக சுந்தரி போலி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மிகவும் ‘ஹைடெக்’காக காட்சி அளித்த இந்த நிறுவனத்தில் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் இயங்கக்கூடிய வகையிலான இன்டர் நெட் வசதியும் சண்முக சுந்தரியின் அலுவலகத்தில் இருந்துள்ளது. இங்கிருந்த படியே இணையதளம் மூலமாக உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கும் தொடர்பு கொண்டு பேசி மோசடி கும்பல் போலி சான்றிதழ்களை தயாரித்திருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த மாநிலங்களில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் போலி சான்றிதழ்கள்தான் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மோசடிப் பெண்ணான சண்முக சுந்தரி கோவையை மையமாக கொண்டு செயல்பட்ட தனது நிறுவனம் மூலம் விளம்பரங்கள் கொடுத்துள்ளார். அதில் ‘‘3 மாதங்களில் பட்டப்படிப்பு மற்றும் கல்வி சான்றிதழ்கள் வாங்க வேண்டுமா? எங்களை அணுகுங்கள்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் போன் நம்பர்கள் மற்றும் முகவரியையும் இடம் பெற செய்துள்ளனர். இதைப்பார்த்து பலர் போட்டி போட்டுக் கொண்டு சண்முக சுந்திரியின் போலி நிறுவனத்தில் விண்ணப் பித்துள்ளனர். அவர்களிடம் ரூ. 5 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு, சண்முக சுந்தரியும், அவரது கூட்டாளிகளும் போலி சான்றிதழ்களை தயாரித்துக் கொடுத்துள்ளனர். 8–ம் வகுப்பு வரை மட்டும் படித்திருந்து கையெழுத்து போடத் தெரிந்திருந்தால் போதும், 3 மாதத்தில், சண்முகசுந்தரி, போலி சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்து விடுவார். சென்னையில் மட்டும் சுமார் 10 பேர் வக்கீல் படிப்புக்கான எல்.எல்.பி. போலி சான்றிதழ்களை பெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ரவுடிகள் சிலரும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி ஒருவனும் இந்த சான்றிதழை பெற்றுள்ளான். இவன் மீது வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. அவனையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதே போல அரசு ஊழியர்கள் பலரும் பதவி உயர்வுக்காக குறுக்கு வழியில் போலி சான்றிதழ் பெற்றிருப்பதும் அம்பலமாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 1000 பேர் வரை இவர்களிடம் போலி சான்றிதழ் பெற்று பல்வேறு துறைகளில் பணியில் சேர்த்துள்ளனர். போலி என்ஜினீயரிங் சான்றிதழ் பெற்றவர்களில் 5 பேர் பெயர் விவரமும், பாராமெடிக்கல் போலி சான்றிதழ் பெற்றவர்களில் 5 பேர் பெயர் விவரமம் தெரிய வந்துள்ளது. இது போல் உருது மொழி சான்றிதழ்களும் போலியாக வழங்கப்பட்டுள்ளன. உருதுமொழி சான்றிதழ் எதற்கு பயன்படுத்துவார்கள் என்று போலீஸ் அதிகாரியிடம் கேட்ட போது, அரபு நாடுகளில் வேலைக்கு சேருவோருக்கு உருது மொழி சான்றிதழ் அவசியம் என்பதால் பலர் போலியாக பெற்றுள்ளனர். நைஜீரிய நாட்டவர்களும் போலி உருது சான்றிதழ்களை பெற்று உள்ளன. எனவே இந்த போலி சான்றிதழ்களை தீவிரவாதிகள் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது என்றார். கோவை தவிர ஆலந்தூரிலும் போலி சான்றிதழ் தயாரிப்பு கும்பலின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்ததை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அங்கும் விசாரணை நடந்து வருகிறது. இப்படி போலி சான்றிதழ் தயாரித்து மோசடி ராணியாக வலம் வந்த சண்முக சுந்தரிக்கு டெல்லியை சேர்ந்த மோசடி ஆசாமி அமித்சிங் மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார். போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுப்பதற்கு வசதியாக சண்முகசுந்தரி, திருச்சி, நெல்லை, வேலூர், காட்பாடி உள்ளிட்ட 15 இடங்களில் சப்–டீலர்களை போல் கிளை நிறுவனங்களையும் நடத்தி வந்துள்ளார். இதன் மூலமாக சண்முக சுந்தரியின் மோசடி கும்பல் தமிழகம் முழுவதுமே விளம்பரம் செய்து ஆட்களை வளைத்துப் போட்டுள்ளனர். இப்படி சிக்குபவர்களிடமிருந்து பெயர், முகவரியை வாங்கும் சண்முகசுந்தரி, என்ன சான்றிதழ் வேண்டும் என்பதையும் தெளிவாக கேட்டுப் பெற்றுக் கொள்வார். பின்னர், இந்த தகவல்கள் அனைத்தையும், டெல்லியில் உள்ள கும்பல் தலைவனான அமித் சிங்குக்கு இணையதளம் மூலமாக அனுப்பி வைப்பார். அவர் அங்கு போலி சான்றிதழ்களை தயாரித்து கூரியரில் அனுப்பி வைத்து விடுவார். இப்படித்தான் மாநிலம் விட்டு மாநிலம் கடந்தும் சண்முகசுந்தரியின் மோசடி நெட் வொர்க் கொடி கட்டி பறந்துள்ளது. போலி சான்றிதழ்களுக்காக ரூ. 5 லட்சம் வரை பணம் வாங்கி வந்த சண்முகசுந்தரி அதில் ரூ. 1½ லட்சத்தை அமித்சிங்குக்கு கமிஷனாக கொடுத்து விடுவார். இந்த பணம் கிடைத்தவுடன், அமித் சிங், எந்த கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வேண்டுமோ, அதனை தயார் செய்து கொடுத்து அனுப்பி விடுவார். இதற்கு உத்தர பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களில் செயல்பட்டு வரும் ஒரு சில கல்வி நிறுவன ஊழியர்களும் உடந்தையாக இருந்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் பதுங்கி இருக்கும் அமித்சிங் மற்றும் போலி சான்றிதழ் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த அத்தனை பேரையும் கூண்டோடு கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சண்முகசுந்தரியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நாளை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் மனுதாக்கல் செய்கிறார்கள். காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், போலி சான்றிதழ் விவகாரத்தில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.