எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தொடங்கியது
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்தது. தேர்வு முடிவு மே 9-ந்தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மதிப்பீடு செய்யும்பணி நேற்று தொடங்கியது.
பிளஸ்-2 தேர்வு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 5-ந்தேதி தொடங்கி மார்ச் 31-ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி மார்ச் 16-ந்தேதி தொடங்கியது. விடைத் தாள் திருத்தும் பணி பல மையங்களில் 17-ந்தேதியும், சில மையங்களில் 18-ந்தேதியும் முடிவடைந்தன.
விடைத்தாள் மையங்களில் இருந்தபடியே ஆசிரியர்கள் உடனுக்கு உடன் மதிப்பெண்களை ஆன்லைனில் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்து அரசு தேர்வுகள் இயக்குனரகத்திற்கு அனுப்பினார்கள்.
தற்காலிக சான்றிதழ்
இந்த வருடம் முதல் முதலாக மாணவர்கள் நலன் கருதி பிளஸ்-2 எழுதி இருக்கும் மாணவர்களுக்கு தேர்வு முடிவு வந்த ஓரிரு நாட்களில் தற்காலிக (புரவிஷனல் சான்றிதழ்) சான்றிதழ் வழங்கும் திட்டத்தை அரசு உத்தரவுப்படி பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்தார்.
அதன்படி இந்த வருடம் தற்காலிக சான்றிதழ் மாணவர்களுக்கு கொடுக்கப்பட இருக்கிறது. அதாவது அந்த சான்றிதழ் அரசுத் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் அடங்கிய அந்த சான்றிதழை மருத்துவம், என்ஜினீயரிங், கால்நடை மருத்துவம், கலை அறிவியல் படிப்புகள் உள்ளிட்ட உயர்கல்வியில் சேர சமர்ப்பிக்கலாம். மதிப்பெண் சான்றிதழ் வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை.
9-ந் தேதிக்குள் வெளியிட ஏற்பாடு
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி முடிந்துவிட்டதால் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அரசு புள்ளி விவர (டேட்டா சென்டர்) மையத்தில் மாணவ-மாணவிகளுக்கான மதிப்பெண் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல் 30-ந்தேதிக்குள் மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டு பின்னர் அவை சரிபார்க்கப்பட இருக்கிறது. கடந்த வருடம் மே 9-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. அதனால் இந்த வருடமும் மே மாதம் 9-ந்தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும்பணி 70 மையங்களில் நேற்று தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழித் தாள்களின் விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் தொடங்கினார்கள். இந்த விடைத்தாள்கள் திருத்திய பிறகு அடுத்த கட்டமாக கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய இருக்கிறார்கள். விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி இந்த மாத இறுதிக்குள் முடிவடையலாம் என்றும் கூறப்படுகிறது.
அதன்பிறகு முடிவு செய்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்படும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.