தமிழகத்தில் 2015-16ம் கல்வியாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை மே 11ம் தேதியும், பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம் மே 6ம் தேதியும் தொடங்குகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 29ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 43 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 7ம் வெளியாகிறது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் ெபாறியியல் படிப்பு சேர்க்கை விண்ணப்பங்களை மருத்துவ கல்வி இயக்குனரகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 593 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 463 இடங்கள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்பில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 6ம் தேதி முதல் வழங்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2015-16ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வரும் மே 6ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக இந்த ஆண்டு 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 4 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 60 மையங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். அண்ணா பல்கலைக்கழகம் தவிர மற்ற மையங்களில் 27ம் தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும். அண்ணா பல்கலைக்கழக மையத்தில் 29ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 29ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 2,555 இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு 383 இடங்கள் போக 2,172 இடம் உள்ளன. இதேபோல், ஒரே ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரி உள்ளது. இதில் அகில இந்திய ஒதுக்கீடுபோக 85 இடம் உள்ளது. இதுதவிர தமிழ்நாட்டில் 12 சுயநிதி மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தம் உள்ள 1,560 இடங்களில், நிர்வாக ஒதுக்கீடு போக 993 இடங்கள் உள்ள. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். அந்த வகையில், 2015-2016ம் கல்வியாண்டிற்கான மருத்துவ மாணவர் விண்ணப்ப விநியோகம் மே மாதம் 11ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியில் அடுத்த மாதம் 11ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும்.
விண்ணப்ப விநியோகம் மே மாதம் 28ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 29ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும். ஜூன் 12ம் தேதி உத்தேச ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். மேலும், விவரங்களுக்கு www.tn.health.org என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டு பிஇ நிலவரம்
பொறியில் படிப்பை பொறுத்தளவில் கடந்த ஆண்டு, மொத்தம் 2,12,000 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில், 1,72,500 விண்ணப்பங்கள் மட்டுமே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரேண்டம் எண் ஜூன் 11ம் தேதியும், ரேங்க பட்டியல் 16ம் தேதியும் வெளியிடப்பட்டது. விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் 17ம் தேதியும் அதனை தொடர்ந்து பொது பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் நடைபெற்றது. கடந்த ஆண்டு கவுன்சலிங்கின் முடிவில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. மெக்கானிக்கல், கம்யூட்டர் சயின்ஸ், சிவில் பிரிவுகளை மாணவர்கள் அதிக அளவில் தேர்வு செய்தனர்.
எம்பிபிஎஸ் படிப்புக்கு: மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகியவற்றில், கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே மாதம் 14ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டன. இதற்காக மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. மொத்தம் 30,380 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது. மொத்தம் 27,876 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, ஜூன் 12ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து 18ம் தேதி முதல்கட்ட கவுன்சிலிங் தொடங்கியது. ஜூலை 27ம் தேதிக்குள் 2ம் கட்ட கவுன்சிலிங் முடிந்து, அனைத்து இடங்களும் நிரப்பப்பபட்டன.
60 இடங்களில் கிடைக்கும்
பொறியியல் மாணவர் சேர்க்கையில் தமிழகம் முழுவதும் 60 இடங்களில் விண்ணப்பம் வினியோகம் நடைபெறுகிறது. சென்னையில் 4 இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. அவை, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி. மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, குரோம்பேட்டை. அரசு பாலிடெக்னிக் கல்லூரி புரசைவாக்கம், பாரதி மகளிர் கல்லூரி பிராட்வே. பொறியியல் மாணவர் சேர்க்கையில், விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பிக்கும் நபர்கள் குறித்த இடங்களில் ஆண், பெண் என இரண்டு கட்டங்கள் தான் கடந்த ஆண்டுகளில் இடம் பெற்றன. ஆனால் இந்த ஆண்டு முதல் திருநங்கைகளும் தங்கள் பாலினத்தை குறிப்பிட இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.