விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி
பெயரளவில் மட்டுமே நடப்பதால் பெற்றோர்கள் நம்பிக்கை குறைந்துள்ளது.
தகுதியான ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு ஆங்கில புலமை கிடைக்கும் விதமாக கல்வி முறையை மாற்ற வேண்டும் .ஆங்கில வழி கல்வியை ஊக்குவிப்பது நல்லதல்ல, தாய்மொழி கல்வியே சிறந்தது என சமூக ஆர்வலர்கள் கூறிவந்தாலும், காலத்தின் மாற்றத்தால் ஆங்கில புலமை இன்றியமையாததாக மாறிவிட்டது. தாய் மொழியில் கல்வி கற்றாலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெறாமல் இருப்பின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆங்கில வழி பள்ளிகளிலே அனுப்பி படிக்க வைக்கின்றனர். இந்நிலையில் ஏழை மக்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. தங்களின் வருவாய்க்கு ஏற்றவாறு குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்பினால் எதிர்காலம் பாதித்து விடுமோ என்ற ஏக்கம் ஒருபுறம், கட்டுபாடின்றி கட்டணங்களை ஏற்றிவரும் ஆங்கில பள்ளிகளில் குழந்தைகளை அனுப்ப வருவாய் தடங்கல் ஒருபுறம் என பரிதவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை அரசு துவங்கியது. மாணவர்களின் சேர்க்கை பெரும்பாலான அரசு பள்ளிகளிலும் அதிகரித்தது.
தங்கள் குழந்தைகளுக்கும் அரசின் உதவியால் ஆங்கில புலமை கிடைக்கும் என ஏழை மக்கள் நம்பினர். ஆனால் அரசு பள்ளிகளில் தேவையான ஆசிரியர்களை நியமிக்காமல் எந்த வசதிகளும் மேம்படுத்தாமல் ஆங்கில வழி கல்வி துவங்கியது எந்த பயனும் தராமலேயே போயிற்று. ஒரு சில பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகளில் பெயரளவில் மட்டுமே ஆங்கில வழி கல்வி செயல்படுகிறது.
தகுதியான ஆசிரியர்களை நியமிக்காமல், இருக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்க போதிய பயிற்சி வழங்காமல் அரசு மெத்தனம் காட்டி வருவதால் பெற்றோர் ஏமாற்றமடைகின்றனர். இவ்வாண்டு பெரும் பாலான அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது.
இவ்வாறு சென்றால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி திறன், நலன் கேள்வி குறியாகிவிடும். மாணவர்களின் நலன்கருதி அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை முறையாக நடத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தகுதியான ஆசிரியர்களை உடனே பணியமர்த்தி முறையான தகுதித்தேர்வு நடத்தி தகுதியானவர்களை அவசர தேவைக்கு தற்காலிகமாக நியமிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.
ஓய்வு பெற்ற ஆசிரியர் முத்து கூறுகையில்,
"" கல்வி கற்பது ஆங்கில வழியாக இருக்க வேண்டும் என்பதில்லை. பள்ளி படிப்பு முடியும்போது மாணவர்கள் நன்றாக ஆங்கிலத்தில் பேச தகுதி பெற்றிருக்க வேண்டியது தற்போது சூழலில் அவசியமாகும். ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கற்க தேவையான வசதிளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். காலத்தின் மாற்றத்தை உணர்ந்து அரசு ஆங்கில வழி கல்வியை துவங்கியது. ஆனால் முறையான வசதிகளை ஏற்படுத்தாமல் ஏழை பெற்றோரை ஏமாற்றும் செயலாகவே இது உள்ளது, &'&' என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.