கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்து
வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக என்ஜினீயரிங் படிப்புக்கு இருந்த மோகம் குறைந்தது இதற்கு முக்கிய காரணமாகும். குறைந்த செலவில் ஏதோ ஒரு பட்டப்படிப்பை படித்து முடித்து அரசு பணிகளுக்கு போட்டித்தேர்வு எழுதி வெற்றி பெற்றுவிட்டால் வேலை உறுதியாகிவிடுகிறது. வங்கிப்பணி, ஆசிரியர் பணி, ஐ.ஏ.எஸ். மற்றும் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகள், ரெயில்வே தேர்வு போன்றவற்றிற்கு பட்டப்படிப்பு அடிப்படை தகுதியாகும். அதனால் ஒவ்வொரு ஆண்டும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக தனியார் மட்டுமின்றி அரசு கல்லூரிகளிடம் கடும் போட்டி ஏற்பட்டது. பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம் போன்ற பாடப்பிரிவுகளில் எப்போதும் பி.காம் படிக்கவே பெரும்பாலான மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டினர். பிளஸ் 2 தேர்வில் 1000–க்கும் மேலான மதிப்பெண்களை எடுத்த மாணவர்கள் கூட பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டவில்லை. மாறாக கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரவே விண்ணப்பித்தனர். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த வருடம் முன்கூட்டியே விண்ணப்பம் விநியோகம் தொடக்கப்பட்டது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு விண்ணப்பங்கள் அதிகளவு வழங்கப்பட்டன. சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் இந்த ஆண்டு 14,300 பேரும், ராணி மேரி கல்லூரியில் 13,500 பேரும் விண்ணப்பித்தனர். தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் 3000 முதல் 5000 அளவுக்கு கூடுதலாக இருந்தது. அதிகளவு விண்ணப்பங்கள் குவிந்ததால் பாடப் பிரிவு இடங்களை அதிகரித்து கேட்டு பல கல்லூரிகள் கடிதம் கொடுத்துள்ளன. இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி மாணவர் சேர்க்கையை நடத்தி கொள்ள கல்லூரிகள் சென்னை பல்கலைகழகத்திடம் அனுமதி கோரியுள்ளன. இதற்கு அனுமதி அளிக்கவும் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர். தாண்டவன் கூறியதாவது:– கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் அதிகளவிலான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் சென்னையிலுள்ள கல்லூரிகள் மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்திக்கொள்ள அனுமதி கோரியுள்ளன. மாணவர்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு கல்லூரிகள் கேட்கும் இடங்களை உயர்த்தி கொள்ள அனுமதி அளிப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுக்கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்ட உடன் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.