WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, September 5, 2015

ஆசிரியர்களின் ஆசான் ராதாகிருஷ்ணன்.

ஆசிரியர் என்பது பணி அல்ல, ஒரு தொண்டு. மாணவர்களின் அறியாமை
எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுகின்றனர் ஆசிரியர்கள். "எழுத்தறிவித்தவன் இறைவன்', "மாணவர்கள் கல் என்றால் ஆசிரியர்கள் சிற்பிகள்' போன்ற பொன்மொழிகள் ஆசிரியர்களுக்கு புகழ் சேர்க்கின்றன. உலகில் ஆசிரியர் தினம் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆசிரியர் தினம் மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களின் பொறுப்பை உணர்த்தும் விதத்திலும், ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை அளிக்க வேண்டும் என்பதையும் இத்தினம் வலியுறுத்துகிறது.

ஆசிரியரின் சிறப்புகள்:
ஆசிரியரின் பழக்க வழக்கங்கள், அப்படியே மாணவரையும் தொற்றிக்கொள்ளும். எனவே, பொறுப்பை உணர்ந்து மாணவருக்கு ஆசிரியர், உண்மையான வழிகாட்டியாக இருக்க வேண்டும். தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான், சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். தன்னிடம் படிக்கும் மாணவர்களை சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் மனிதனாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவனுக்கு சமூகத்தில் கிடைக்கும் வெற்றி தான் கற்பித்த ஆசிரியரின் வெற்றி. இதனால் தான் இந்தியாவில் மாதா, பிதாவுக்கு அடுத்த இடம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு சிறந்த ஆசிரியரின் பண்புகள் அவரிடம் படிக்கும் மாணவர்களை ஈர்ப்பது மட்டுமன்றி அவர்கள் மனதில் அப்படியே பதிகிறது. அவரே மாணவனுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பது நூறு சதவீதம் உண்மை. தாய் தந்தையை விட, ஆசிரியரிடம் தான் ஒரு குழந்தை அதிக நேரம் செலவழிக்கிறது. எனவே தான் ஆசிரியர்கள் இரண்டாவது தாய் என அழைக்கப்படுகின்றனர். தன்னிடம் படிக்கும் மாணவர்களை சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் மனிதனாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவனுக்கு சமூகத்தில் கிடைக்கும் வெற்றி தான் கற்பித்த ஆசிரியரின் வெற்றி.
ஆசிரியரும் ஒரு மாணவரே:
தற்போது ஆசிரியர் - மாணவர் உறவில் பல பிரச்னைகள் எழுகின்றன. ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் விரும்பத்தகாத சம்பவங்களை தடுக்கலாம். பட்டதாரி ஆசிரியரை விட, ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் பணி இன்றியமையாதது. ஏனெனில், குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது எளிதான விஷயமல்ல. மற்ற பணிகளைப் போல, ஆசிரியர் பணியில் சாதித்து விட முடியாது. பொறுமை, அர்ப்பணிப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் தான், தரமான கல்வியை அளிக்க முடியும். மாணவரைப் போல, ஆசிரியரும் அறிவை பெருக்கிக்கொள்ள தயங்கக் கூடாது. ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஜனாதிபதியே விருது வழங்கி கவுரவிக்கிறார். இது ஆசிரியர்களுக்கு கிடைக்கும் பெரிய கவுரவம்.
ஆசிரியர் தினம் உருவானது எப்படி.
சிறந்த கல்வியாளராகவும், தத்துவமேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன், நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு அவர், தனது பிறந்த நாளை தனியாக கொண்டாடுவதை விட அதை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் தனக்கு பெருமை எனக் கூறினார். ஆசிரியர் தொழிலில் தனக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அவர் கூறினார். அவரது பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி கலாம் "சிறந்த ஆசிரியர் என்பவர் சிறப்பாக கற்பிப்பவர் மட்டுமல்ல, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும்; ' என்றார். ஆசிரியர் -மாணவர் உறவு எந்தளவு முக்கியம் நமது பள்ளி கல்வி முறையில் ஆசிரியர் -மாணவர் உறவுமுறை என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. பொதுவாக நாம் ஒரு ஆசிரியரை வெறுத்தால் அவர் நடத்தும் பாடத்தை வெறுப்போம். ஒரு ஆசிரியரை விரும்பினால் அவர் நடத்தும் பாடத்தையும் விரும்புவோம். பொதுவாக இன்றைய நிலையில், பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், குழு மனப்பான்மையின் அடிப்படையில் ஆசிரியர்களை வெறுக்கும் மனோபாவம் மாணவர்களிடம் உள்ளது. ஆனால் தனிப்பட்ட முறையில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு ஆசிரியரை வெறுத்தால் அவர் எப்படி நம்மை விரும்புவார்? நமது படிப்பு விஷயத்தில் எப்படி தனிப்பட்ட அக்கறை செலுத்துவார்? என்பதை யோசிக்க வேண்டும். ஒரு ஆசிரியரை அறிந்துகொள்வதானது, ஒரு மாணவர் என்ற முறையில் நமக்கு பெரும் துணைபுரியும். ஒவ்வொரு ஆசிரியரும் மனிதர்தான். அந்தவகையில் அவருக்கும் விருப்பு-வெறுப்புகள் உண்டு. எனவே ஒரு நல்ல மாணவர் அந்தவகை உளவியலை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். ஆசிரியருடன் நல்ல உறவை பேணுவதானது, அவர் உங்களுடன் உண்மையிலேயே ஒரு நண்பராக நடந்துகொள்ள வேண்டும். அவர் உங்கள் விஷயத்தில் தீவிர அக்கறை செலுத்துவார். இதன்மூலம் நீங்கள் பாடவிஷயத்தில் நல்ல புலமையை பெறமுடியும். அதற்கு அந்த ஆசிரியர் எவ்வளவு வேண்டுமானாலும் உதவுவார். உங்களின் சந்தேகங்களை எந்த தயக்கமும், பயமும் இன்றி கேட்கலாம். மேலும் பாடம் சம்பந்தமாக உங்களின் அறிவு மற்றும் செயல்பாடுகள் பற்றி உண்மையான மற்றும் ஆழமான மதிப்பீடுகளை ஆசிரியர் உங்களுக்கு வழங்கி, உங்களின் உண்மைநிலை பற்றி உங்களுக்கு புரியவைப்பார்.ஆசிரியரிடம் நல்ல உறவை பேணும் மாணவர், பாடம் சம்பந்தமான பிரச்னைகள் மட்டுமின்றி சில தனிப்பட்ட பிரச்சினைகளையும் பகிர்ந்து அதற்கான அக்கறையுள்ள ஆலோசனைகளைப் பெறலாம். ஆசிரியருடன் நல்ல உறவை பேணுவதென்பது, அவரிடம் அளவுக்கு மீறி உரிமை எடுத்துக்கொள்வது என்றில்லை. அவரை சரியாகப் புரிந்து, அவரின் அன்பையும், ஆதரவையும் பெற்று நம் நிலையை வளப்படுத்திக் கொள்வதில்தான் நமது சாமர்த்தியம் அடங்கியுள்ளது. தத்துவமேதை சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888 செப்., 5ம் தேதி திருத்தணியில் பிறந்தார். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தது. இதனால் இவர் தனது கல்வியை உதவித்தொகை மூலமே பெற்றார். பள்ளிப்படிப்பை திருவள்ளூரில் படித்தார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தத்துவயியல் துறையில் எம்.ஏ., பட்டம் பெற்றார். பின் 1909ல் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இங்கு தத்துவயியல் துறையில் நன்கு தேர்ச்சி பெற்றவரானார். 1918ல் மைசூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். 1921ல் கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி மாறுதல் பெற்றார். 1923ல் "இந்திய தத்துவயியல்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். ஒருமுறை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வாய்ப்பு வந்தது. அங்கு இந்தியாவின் தத்துவயியலை உலகுக்கு எடுத்துக்காட்டினார். 1931ல் ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், 1939ல் பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பணியாற்றினார். 1946ல் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின், பல்கலைக் கழக கல்விக் குழுவில் பணியாற்ற அழைப்பு வந்தது. இதில் இந்திய கல்விக்கு தேவையான திட்டங்களை வகுத்தார். 1949ல் சோவியத் யூனியனுக்கான இந்திய தூதராக நியமிக்கப் பட்டார். 1952 மே 13ல் நாட்டின் முதல் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார். 1954ல் இவருக்கு நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.