WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 10, 2015

முன்மாதிரியாகத் திகழும் குக்கிராம அரசுப் பள்ளி.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள குக்கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி
மாணவர்கள், அனைத்து செயலிலும் பிற பள்ளிகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். ஆங்கிலம் கற்பது அவசியமாகியதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியது. அரசுப் பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்றியமைத்தது. ஆங்கில வழி பள்ளிகளால் மாணவர்களின் ஆங்கிலக் கல்வித் திறன் மேம்பாடு அடைந்ததா என கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விடை அளிப்பது போல, தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகள் உருவாகி வருகின்றன. இதில், குன்னூர் அருகே உள்ள பெட்டட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, "மாற்றம் என்பது சாத்தியமே" என்ற ஆங்கிலம் போதிக்கும் திட்டம், மாணவர்கள் மத்தியில் ஆங்கில மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையில் பள்ளிக்கு வருவது முதல் வீட்டுப்பாடம் முடியும் வரை இப்பள்ளி மாணவர்கள் செய்து வரும் மாற்றங்கள் ஏராளம். பள்ளிக்கு அருகேயுள்ள டாஸ்மாக் கடையால் பிரச்சினை ஏற்பட்டது. இந்த கல்வியாண்டின் முதல் நாளிலேயே மதுவுக்கு எதிராக போராடி வெற்றியும் பெற்றனர். மதுக்கடை அகற்றப்பட்டது. பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் சங்கம் ஏற்படுத்தப்பட்டு, தலைவராக மாணவர் ஆர்.ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இச்சங்க மாணவர்கள் 5 குழுக்களாக பிரிந்து தினமும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகின்றனர். கழிவறைகளை தூய்மையாக வைப்பது, பள்ளியிலேயே காய்கறித் தோட்டம், கை கழுவும் நடைமுறை போன்றவற்றை மாணவர்கள் பின்பற்றுகின்றனர். மாணவர்கள் சதீஷ், லாவண்யா, ஆர்.ஆர்.பிரியதர்ஷினி ஆகியோர் தினமும் சக மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று விளையாட்டுடன் வீட்டுப்பாடம் செய்து முடிப்பதை உறுதி செய்கின்றனர். மாணவர்களிடம் இத்தகயை மாற்றங்களை ஏற்படுத்திய ஆசிரியை த.புஷ்பாவை கோவை அரிமா சங்கத்தினர் கவுரவித்துள்ளனர். இந்த மாற்றங்களால், கல்வித்துறை மூலம் பள்ளிக்கு ‘ஏ’ கிரேடு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியை த.புஷ்பா கூறியதாவது: மாணவர்களுக்கு கேட்டல், வாசித்தல், பேசுதல், எழுதுதல் போன்ற 4 பிரிவுகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், பின் தங்கிய மாணவர்களுக்கு கணினி மூலம் சொற்களை காட்சிப்படுத்தி பயிற்றுவிக்கும்போது அவர்களின் புரிதல் திறன் மேம்படுகிறது. பள்ளியில் பயிலும் ஆங்கிலத்தில் சிறந்த மாணவிகளைக் கொண்டு பிற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்கிறது. தங்களுக்குள் உள்ள அச்சம் மற்றும் தயக்கம் விடுபட்டு அவர்கள் ஆங்கிலத்தில் ஆளுமை பெறுகின்றனர். படிப்புடன் விளையாட்டு, சமூகப்பணிகளும் முக்கியமானவை என்பதை மாணவர்கள் உணர்ந்து செயல்படுகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.