WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 22, 2015

தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை:மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு நிலை.

வங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் இலங்கையை ஒட்டி புதிய காற்றழுத்தத்
தாழ்வு நிலை உருவாகி உள்ளதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த மழை பெய்ததால் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. தற்போது மழை குறைந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுவையிலும் பலத்த அல்லது மிகபலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் பலத்த, மிகப் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். மேலும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்யும். சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் சில நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பெய்து வரும் மழைக்கு தமிழகத்தில் இதுவரை 85 பேர் பலியாகியுள்ளனர். சமீபத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், சென்னைப் புறநகர் பகுதிகளில் பலத்த மழை காரணமாக பல இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் வீடுகளைச் சூழ்ந்திருந்தது. இதையடுத்து ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு வெள்ளத்தில் சிக்கி மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தனர். மாநில நிர்வாகமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் முக்கிய பங்காற்றியது. கடந்த இரண்டு நாள்களாக மழை குறைந்து, வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் பலத்த மழை அச்சுறுத்தல் வந்துள்ளது. மழை நிலவரம் (மி.மீட்டரில்): கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் 90 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 70 மி.மீ, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம், திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் தலா 60 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் சென்னை நுங்கம்பாக்கத்தில் 34 மி.மீட்டரும், விமான நிலையத்தில் 18 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் இருவரும் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை சனிக்கிழமை பார்வையிட்டனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை சனிக்கிழமை பார்வையிட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட அவர் திட்டமிட்டுள்ளார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளச் சேதத்தை பார்வையிட்டார். இரு அமைச்சர்களும் வெள்ளப் பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் பா.ஜ.க.வின் மத்திய தலைமைக்கு சேதம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.