Monday, November 7, 2016
தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை, கட்டுமானப் பணிகளுக்குத் தடை.
தலைநகர் தில்லியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காற்று மாசு அதிகரித்துள்ளது. கடுமையான பனிப்புகை மூட்டம் நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது; நகரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத வகையில் தில்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு, பனிப்புகை அதிகஅளவில் இருந்து வருகிறது. மாசுவின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், அதனால் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் அதிகரிக்கும் சூழல் உள்ளதாலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசும், தில்லி அரசும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
தலைநகரில் சனிக்கிழமை முழுவதும் காணப்பட்ட பனிப்புகை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை தொடர்ந்து தீவிரத்துடன் நீடித்தது. இதனால், திறந்தவெளியில் வேலை செய்வோரும், வாகனங்களில் செல்வோரும் அசௌகரியத்தை எதிர்கொண்டனர். கண் எரிச்சல், இருமல், தொண்டை எரிச்சல், மூச்சுத் திணறல் பாதிப்புகளும் இருந்ததாக குடியிருப்புவாசிகள் சிலர் கவலை தெரிவித்தனர்.
சாலைகளில் காலை வேளையில் பார்வைத்திறன் 200 மீட்டருக்கு குறைந்து காணப்பட்டது. இதனால், முகப்பு விளக்கை எரியவிட்டவாறு பல இடங்களிலும் வாகனங்களை அதன் ஓட்டுநர்கள் இயக்குவதைக் காண முடிந்தது.
காற்றில் மாசுக்களின் அளவு பாதுகாப்பு வரம்பைவிட அதிகரித்து வருவதால் உடல் நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அமைச்சரவைக் கூட்டம்: தில்லியில் நீடித்துள்ள காற்று மாசு, பனிப்புகையைக் கருத்தில்கொண்டு அனைத்து பள்ளிகளுக்கும் மூன்று நாள் விடுமுறை அளிக்கவும், தலைநகரில் ஐந்து நாள்களுக்கு அனைத்து கட்டுமானப் பணிகள், இடிப்புகளுக்கு தடைவிதிக்கவும் தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் காற்று மாசு, பனிப்புகையின் அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அவசரமாக கூடியது. இதில் தில்லியின் புனிப்புகை, காற்று மாசு குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. காற்று மாசு தொடர்பான அவசர சூழ்நிலையைச் சமாளிக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது என்று இக்கூட்டத்தின்போது முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்திற்குப் பிறகு அதன் விவரங்கள் குறித்து முதல்வர் கேஜரிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில் தலைநகரில் திங்கள்கிழமை முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கு அனைத்து வகையான கட்டுமானப் பணிகளுக்கும், இடிப்புகளுக்கும் தடை விதிக்கவும், டீசலைப் பயன்படுத்தி இயக்கப்படும் ஜெனரேட்டர்களுக்கு ஐந்து நாள் தடை (மருத்துவமனைகள், செல்லிடப்பேசி கோபுரங்ககள் நீங்கலாக) விதிக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று, திங்கள்கிழமை முதல் அடுத்த 10 தினங்களுக்கு பதர்பூரில் உள்ள மின் உற்பத்தி நிலையமும் மூடப்படும். 100 அடி மற்றும் அதற்கு மேல் அகலமுள்ள சாலைகள் மீது தண்ணீர் தெளிப்பு பணியை வாரம் ஒருமுறை பொதுப் பணித்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பதர்பூர் மின்நிலையத்தில் இருந்து சாம்பல் வெளியேறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். காய்ந்த இலைகள், கழிவுகள் எரிப்பதை தடுக்கும் நடவடிக்கை கடுமையாக்கப்படும்.
பள்ளிகளுக்கு விடுமுறை: தில்லியில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை மூன்று தினங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. குப்பைக் கிடங்குகளில் தீ எரிவதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாகனக் கட்டுப்பாடு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தயாரிப்புப் பணிகளைத் தொடங்குமாறு அரசுத் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடுவது தொடர்பான முடிவுகளும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக கேஜரிவால் தெரிவித்தார்.
செயற்கை மழை: மேலும், அண்டை மாநிலங்களான ஹரியாணா, பஞ்சாபில் அதிகளவில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகள் காரணமாக தில்லியின் காற்று மாசு அதிகரிப்பதால் செயற்கை மழையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து மத்திய அரசுடன் தில்லி அரசு ஆலோசிக்க உள்ளது. இது தொடர்பாக தில்லியின் தலைமைச் செயலர், சுற்றுச்சூழல் செயலர் மத்திய அரசுடன் கலந்தாலோசிக்க உள்ளனர்.
தில்லியில் ஆரம்பத்தில் இருந்தே காற்றில் மாசு இருந்து வருகிறது. அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதும் தில்லியின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும், மாசுவுக்கும் பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. ஆனால், இந்த அளவுக்கு பயிர்கள் எரிக்கப்படும் என்றோ வானிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்றோ யாரும் நினைக்கவில்லை. மாசுவில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில், முடிந்தவரை திறந்தவெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார் முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
தில்லியில் பனிப்புகை தாக்கத்தின் காரணமாக, நகரவாசிகளுக்கு மூச்சுத் திணறல், ஆஸ்துமா, அலர்ஜி ஆகிய பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தில்லியில் பணியாற்றும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) 7 ஆயிரம் வீரர்களுக்கு மாசுத் தடுப்புக்கான முக கவசங்களை (மாஸ்க்) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அப்படையின் தலைமை இயக்குநர் ஓ.பி. ஷைனி தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.