WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 17, 2017

புதிய பி.எட். கல்லூரிகள் தொடங்க நிகழாண்டில் அனுமதியில்லை: மத்திய அரசு முடிவு.


புதிய பி.எட். கல்லூரிகள் தொடங்குவதற்கு நிகழாண்டில் அனுமதி அளிப்பதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பயிற்சி
நிறுவனங்களின் தரம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதையடுத்து, இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இதுகுறித்து தில்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நாட்டில் தற்போது வரையிலும் பி.எட். கல்லூரிகள் புற்றீசல் போல் ஆரம்பிக்கப்படுகின்றன. அந்தக் கல்லூரிகளிடம் நீங்கள் இன்று பணம் கொடுத்தால், நாளைக்கே பட்டச் சான்றிதழ் கிடைக்கும். ஆசிரியர் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், இந்நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டியுள்ளது. ஆகையால், நிகழாண்டில் புதிய பி.எட். கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி கொடுப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், நிகழாண்டில் புதிய பி.எட். கல்லூரிகள் எதுவும் தொடங்கப்பட மாட்டாது. இதேபோல், ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் பி.எட். கல்லூரிகளின் தரத்தை பரிசோதிக்கும் வகையில், அதன் தரம் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. இதற்காக, ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் பி.எட். கல்லூரிகளிடம் இருந்து அதன் தரம் தொடர்பான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 4,000 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: 7 ஆயிரம் பி.எட். கல்லூரிகள் மட்டுமே பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளன. அதுமட்டுமன்றி, 4 ஆயிரம் பி.எட். கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பி.எட். மற்றும் டி.எட். படிப்புகளுக்கு செயல்வழிப் பயிற்சிகளை (பிராக்டிகல்) மேலும் அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேற்கண்ட பட்டப் படிப்புகளை பயிலுவோருக்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் முன்னிலையில் செயல்வழிப் பயிற்சிகள் அளிக்கப்படும். அப்போது அவரது செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப்படும். மாணவர்களின் கருத்துகளுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்று பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.