WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 31, 2017

தனியார் பள்ளிகளைப் போல சுவர் விளம்பரங்களால் ஈர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

       அரசுப் பள்ளி

கிராமத்து வீட்டுச் சுவர்களில் ஜவுளிக் கடை, நகைக் கடை விளம்பரங்களைப் பார்த்திருப்போம். 'நமது சின்னம்.....' என்று எப்போதோ முடிந்துபோன தேர்தலின் கட்சி விளம்பரத்தையும் பார்த்திருப்போம். ஆனால், திருச்சி மாவட்டம், பூவாளூர் கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் வீட்டுச் சுவர்களில் ஒரு வித்தியாசமான விளம்பரத்தைப் பார்க்க முடிந்தது. ஓர் அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் சேர்க்கைக்கான அழைப்பு விளம்பரம்தான் அது. 'அட... அரசுப் பள்ளிக்கு விளம்பரமா?' என ஆச்சர்யத்துடன் விசாரித்தால், அந்தப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் சதீஷ் குமாரை நோக்கி பெருமிதத்துடன் விரல்கள் சுட்டிக் காட்டுகின்றன.

''நான் இந்தப் பள்ளிக்கு ஆசிரியராக வந்து ஒன்பது வருஷமாச்சு. நான் வந்த புதுசுல இங்கே 928 மாணவர்கள் படிச்சுட்டு இருந்தாங்க. ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக குறைஞ்சு நானூற்று எழுபதுக்கு வந்துடுச்சு. ஒவ்வொரு வருஷமும் எண்ணிக்கை குறையும்போது எனக்கு ரொம்ப வேதனையா இருக்கும். வேற பள்ளிக்குப் போய்விட்ட பசங்களைத் தேடிப்பிடிச்சு 'எதுக்கு வேற ஸ்கூலுக்குப் போய்ட்டீங்க?'னு விசாரிச்சேன். 'இந்த ஸ்கூலுல ஸ்மார்ட் கிளாஸ் இல்லே. இந்த வசதி இல்லே, அந்த வசதி இல்லே'னு சொன்னாங்க. அவங்க சொல்றதும் நியாயம்தானே? நம்ம பள்ளிக்கு வரும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டியது நம்ம கடமைனு நினைச்சேன். தலைமை ஆசிரியரிடமும் பேசினேன். 'என்ன செய்யணுமோ சொல்லுங்க. என்னால் முடிஞ்சதைச் செய்யறேன். நம்ம ஸ்கூல் பழைய மாதிரி நிறைய மாணவர்களோடு நிறைஞ்சு இருக்கணும்'னு சொன்னார்.


உடனே ஃபேஸ்புக் பக்கத்தில் எங்கள் பள்ளியைப் பற்றி எழுதி, உதவி கேட்டேன். சில நல்ல உள்ளங்கள் உடனடியா உதவிசெய்ய முன்வந்தாங்க. ஸ்மார்ட் கிளாஸ், கம்பியூட்டர், புரொஜெக்டர், வித்தியாசமான இருக்கைகள், திரைச்சீலைகள் எனப் பள்ளியையே புதுசா மாற்றினோம். அன்றாட பள்ளி நடவடிக்கைகளிலும் சில மாற்றங்களைக் கொண்டுவந்தோம். தினமும் காலையில் ஆங்கில செய்தித்தாளைக் கொடுத்து எல்லா மாணவர்களையும் படிக்கச் சொல்வோம். கேரம், சதுரங்கம், யோகா, பசுமை நடை எனப் பல விஷயங்களை நடைமுறைப்படுத்தினோம். கம்ப்யூட்டரை எப்படி ஓப்பன் பண்ணனும்னே தெரியாதிருந்த ஒரு மாணவன், இப்போ அதே கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி செமினார் எடுக்கிறான். நல்லாப் படிக்கும் மாணவன், சரியாகப் படிக்காத மாணவன் என்கிற பேதம் வந்துடக் கூடாதுனு கவனமா இருந்தோம். அதனால், படிப்பில் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்குப் புராஜெக்ட் கொடுத்து, எங்கள் முன்னாடியே செய்யச் சொல்வோம். அந்த மாணவர்களின் கிரியேட்டிவிட்டியை எல்லார் முன்னாடியும் பாராட்டுவோம். இதனால், அவங்களுக்கும் பெரிய தன்னம்பிக்கை உருவாச்சு. இப்படிப் பல விஷயங்களைச் செய்ததில் எங்கள் பள்ளியைப் பற்றி வெளியே தெரிய ஆரம்பிச்சு இருக்கு. இந்தப் பள்ளியிலிருக்கும் வசதிகள் பற்றி இன்னும் நிறையப் பேருக்குத் தெரியணும்னு இந்த விளம்பரத்தைக் கொடுத்திருக்கோம். இந்த வருஷம் மாணவர் சேர்க்கை எதிர்பார்த்ததைவிட அதிகமாகிருக்கு'' என்கிற ஆசிரியர் சதீஷ் குமாருக்கு, இந்தச் சுவர் விளம்பரத்தால் பாராட்டுகள் மட்டுமல்ல, சில மிரட்டல்களும் வந்திருக்கிறதாம்.


''அதையெல்லாம் நான் பெருசாவே எடுத்துக்கலை. அவங்களோட மிரட்டலிலிருந்தே எந்த அளவுக்குப் பயந்துட்டு இருக்காங்கன்னு தெரியுது. இப்போகூட கேபிள் டிவியில் எங்க ஸ்கூல் விளம்பரம் ஓடிட்டு இருக்கு. இந்த ஸ்கூல்ல நிஜமாவே இந்த வசதிகள் இருக்கானு பெற்றோர்கள் வந்து பார்த்து, கையோடு அட்மிஷனும் போட்டுட்டுப் போறாங்க. அதைப் பார்க்கிறப்போ பட்ட கஷ்டமெல்லாம் பறந்துப்போகுது'' என்கிறார் சதீஷ் குமார் உற்சாகமாக.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.