Thursday, December 21, 2017
ஜாக்டோ -ஜியோ தொடர்பான வழக்கு: விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றம்.
ஜாக்டோ -ஜியோ அமைப்பின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான வழக்கின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் (ஜாக்டோ-ஜியோ) கடந்த செப்டம்பர் 7 -ஆம் தேதி போராட்டம் அறிவித்திருந்தனர். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த டி.சேகரன் என்பவர் இந்த வேலைநிறுத்தத்துக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் செப்டம்பர் 21 -ஆம் தேதி, தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் ஜாக்டோ -ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மோசஸ் ஆகியோர் நேரில் ஆஜராகினர். பின்னர், 7 ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு செப்டம்பர் 30 -ஆம் தேதிக்குள் அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும், அக்டோபர் 13 -ஆம் தேதிக்குள் அதை நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டனர்.
அப்போது ஜாக்டோ -ஜியோ அமைப்பு சார்பில், இந்த வழக்கை இதே அமர்வு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, அந்த அமர்வு நீதிபதிகளில் ஒருவரான ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வில் வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ஜாக்டோ -ஜியோ தரப்பு வழக்குரைஞருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்க மறுத்து விசாரணையை டிசம்பர் 20 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போதும் ஜாக்டோ -ஜியோ அமைப்பு சார்பில் வழக்குரைஞர் ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த நீதிபதிகள், விசாரணைக்கு கால அவகாசம் கோருவதால் நீதிமன்றத்தின் நேரம் வீணாகிறது. எனவே இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.