தமிழகத்தில், பள்ளிகளை திறப்பது குறித்து, அனைத்து பள்ளிகளிலும், வரும், 9ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, மார்ச், 25ல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
அன்று முதல், பள்ளிகள், கல்லுாரிகள் என, அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தற்போது, கொரோனா பரவல் குறைந்து வருவதால், ௯ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பள்ளிகள்; கல்லுாரிகள், வரும், 16ம் தேதி முதல் செயல்படத் துவங்கும் என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார். ஆனால், பள்ளிகளை திறக்க, பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவ வாய்ப்புள்ளதாலும், குளிர்காலம் துவங்க உள்ளதாலும், பள்ளிகள் திறப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில், பள்ளி திறப்பு குறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது.
முடிவெடுத்தது ஏன்?
அதன் அடிப்படையில், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் தீரஜ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பள்ளிகள் திறப்பு குறித்து, மத்திய அரசு, செப்., 30ல் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அக்.,15க்கு பின், சூழ்நிலைக்கேற்ப பள்ளிகளை, மாநில அரசுகள் படிப்படியாக திறக்க அனுமதித்துள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சுகாதாரத் துறை, தொற்று நோய் சிறப்பு வல்லுனர் குழுவுடன் கலந்தாலோசித்து, வரும், 16ம் தேதி முதல், 9, 10, 11 12 ம்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், உரிய பாதுகாப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுடன், பள்ளிகளை திறக்க, அரசு அனுமதித்தது.
மாணவர்கள் பாடங்களை, கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வழியாக கற்பது, முழுமையான நிறைவை அளிக்காது. ஆசிரியர்களிடம் நேரடியாக வகுப்பறையில், கற்பதன் வழியாகத்தான், மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்வர். தேர்வை எதிர்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்பதால், இம்முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, அந்தந்த பள்ளி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, பள்ளிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான், மாநிலத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
9ல் கருத்து கேட்பு
அதன்படி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும், தனியார் பள்ளி நிர்வாகத்துடனும், பள்ளி திறப்பு குறித்து, கருத்து பெற வேண்டியள்ளது.
இதற்கு வசதியாக, வரும், 9ம் தேதி, மாநிலம் முழுவதும், பள்ளிகளில், காலை, 10:00 மணிக்கு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். இக்கூட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். கலந்து கொள்ள இயலாதவர்கள், கடிதம் வழியே, தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், அந்தந்த பள்ளிகளை திறப்பது குறித்து, அரசால் முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.