WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, June 18, 2023

கல்விக் கடன் வசூலில் வங்கிகள் கெடுபிடியால் மாணவர்கள், பெற்றோர் மன உளைச்சல் - திமுக வாக்குறுதிப்படி அரசே ஏற்குமா?

                           



மாணவர்கள் பெற்ற கல்விக் கடனை வசூலிக்கும் பணியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கல்விக் கடனை அரசே ஏற்க வேண்டுமென மாணவர்கள், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 159-வது வாக்குறுதியாக, “தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழக கல்லூரிகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற தமிழக மாணவர்கள், ஓராண்டு காலத்துக்குள் கடனை திருப்பிச் செலுத்த இயலாவிட்டால், 30 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்விக் கடனை அரசே ஏற்று திரும்பச் செலுத்தும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்த வாக்குறுதி குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே, வங்கி நிர்வாகங்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் கல்விக் கடனை திருப்பி வசூலிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.

கல்விக் கடன் பெற்றவர்களில் பலரும் வேலைவாய்ப்பு கிடைக்காமல், வருமானமின்றி தவித்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்கள் மூலம் கடனை வசூலிக்க வங்கிகள் கெடுபிடி காட்டுவதாக கடன் பெற்ற மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.


இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் சிலர் கூறியது: படிப்பதற்கே கட்டணம் செலுத்த முடியாத நிலையில் தான் கடன் பெற்றோம். வேலை வாய்ப்பும் கிடைக்காத சூழலில், அதை திருப்பிச் செலுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த வாக்குறுதி ஆறுதல் அளிக்கும் விதத்தில் இருந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்தும் கல்விக் கடன் ரத்து குறித்து அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றனர்.

இது குறித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில துணைச் செயலாளர் துரை. அருள்ராஜன் கூறியதாவது: வங்கிக் கடனை வசூலிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனம் பெற்றுள்ளது. அந்த நிறுவன ஊழியர்கள், கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும், தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்தும் கடன் வசூலிப்பு பணியை செய்து வருகின்றனர்.

இதனால் பல குடும்பங்கள் அச்சமடைந்துள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலின்போதும், சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், கல்விக் கடனை ரத்து செய்வோம் என திமுக வாக்குறுதியளித்த போதிலும், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் ரத்து செய்யவில்லை.


இல்லாவிட்டால், அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால், கல்விக் கடனை சம்பந்தப்பட்ட மாணவர்களே முழுமையாக திருப்பிச் செலுத்திவிடுவார்கள். எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளாத நிலையில், கல்விக் கடன் பெற்றுள்ள 6.74 லட்சம் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே, தமிழக முதல்வர் கருணையுடன் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.