மாணவர்கள் மட்டுமல்ல...பெரியர்வர்களுக்கு தேர்வுகள் என்றாலே ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது. எனவே, தேர்வுக்கு மாணவர்கள் பயப்படுவதில் பெரிய ஆச்சர்யம் இல்லை. ஆனால் தேர்வுகளைக் கண்டு பயப்படாமல் அதிக மதிப்பெண்களை மாணவச் செல்வங்கள் பெற முடியும். தற்போது 10, 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகள் நெருங்கி வருகின்றனர். இதனால் சில மாணவர்கள் பயத்தில் இருக்கலாம். ஆனால் தேர்வுகளுக்கு மாணவர்கள் அஞ்சக்கூடாது.
பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், துாங்காமல், சரியாகச் சாப்பிடாமல், தேவையில்லாமல் பதட்டத்தை உருவாக்கிக்கொள்ளாமல், மனதை நிலைப்படுத்திப் படிக்க வேண்டும். 10, 11, 12-ம் வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும்போது நாம் எளிதாக உயர்கல்வி நிறுவனங்களில் சேர முடியும் என்று கல்வி நிபுணர்கள் அட்வைஸ் தருகின்றனர். எனவே அதிக மதிப்பெண் பெறுவதற்கான வழிமுறைகளை கீழே பார்ப்போம்.
பாடங்கள்
பாடப்புத்தகங்களை நல்ல முறையில் தெளிவாகப் படித்து மனதில் வாங்கிக் கொள்வது முக்கியம். இதன்மூலம் பாடங்கள் மறக்காது. மேலும் அன்றைய பாடங்களே அன்றே படித்திருந்தால் அவை எளிதில் மனதில் பதியும். நாம் பாடங்களை ரிவைஸ் செய்யும்போது எளிதாக இருக்கும். நல்ல துாக்கம் மாணவச் செல்வங்களின் படிப்புக்கு நல்ல ஓய்வு அவசியம். எனவே படிப்புக்கு இடையே, மூளைக்கு புத்துணர்வு அளிப்பது துாக்கம்தான். நன்கு துாங்கி எழுந்த பிறகு படிப்பது தான், மூளையில் நல்ல முறையில் பதிவாகும். துாக்கமின்மையால் மாணவர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தி, தேர்வறையில் உரிய பதில் எழுத முடியாமல் போகும் நிலை வரலாம். எனவே அவ்வப்போது நல்ல தூக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
உணவுக் கட்டுப்பாடு:
அதேபோல் மாணவர்களுக்கு நல்ல உணவும் அவசியமாகும். பழக்கப்படாத உணவுகளை உண்ணும்போது அது மாணவர்களுக்கு ஒவ்வாமையா ஏற்படுத்தலாம். அதேபோல் தேர்வு நேரத்தில், துரிதவகை உணவுகள் (பாஸ்ட்புட்), முறையாக சமைக்கப்படாத உணவுகள், ஒவ்வாமை தரும் உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதை சாப்பிட்டு, தேர்வு நேரத்தில் உடல்நலம் பாதிக்கப்படும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளக்கூடாது. இதனால் தேர்வுகளை தவறவிடும் நிலை வரலாம். எனவே, வீட்டில் சமைத்த காய்கறி வகைகளை சாப்பிடலாம். அதேபோல் கீரைகள், பழங்கள் அதிகம் உணவில் சேர்ப்பதால், உடல் சுறுசுறுப்படையும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உந்துதலாக இருக்கும். படிப்பில் ஆர்வமாக இருக்கையில் வயிறு புடைக்க உண்ண விருப்பம் இருக்காது. அதிகம் உண்டாலும் உறக்கம் வந்துவிடும். எனவே அளவாகவும் அதே சமயம் சத்துள்ள உணவாகவும் உண்ண வேண்டும். சான்றாக கடலை மிட்டாய் தின்று வயிறு நிரம்பத் தண்ணீர் குடிக்கலாம்.
நேரம் ஒதுக்குதல்..
தேர்வுக்கு எவ்வாறு நேரத்தை ஒதுக்கிப் படிப்பது, எந்த நாளில் எந்தப் பாடத்தைப் படிப்பது என்பனவற்றை எல்லாம் நாள்வாரியாக பாகுபடுத்தி ஓர் அட்டவணையைத் தயார் செய்ய வேண்டும். நேரத்தை திறம்படச் செலவழிக்கும் வகையில், தேர்வுக்காகப் படிக்கும் சமயங்களில் அங்கும் இங்கும் செல்வதையும், நேரத்தை பலியிடும் வெட்டிப்பேச்சுகளையும் கட்டுப்படுத்துங்கள். சலிப்பு தோன்றுமானால் சிறிது நேரம் வெளியில் நடந்து வரலாம். புத்தகம் முழுவதையும் படிப்பதற்கு போதிய நேரமில்லை என நினைத்தால் உடனே செய்ய வேண்டியது இதுதான். கடந்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குரிய பழைய வினாத்தாள்களை எடுத்துக் கொண்டு அதில் உள்ள வினாக்களுக்கு தேர்வில் விடையெழுதுவதற்கு ஏற்ப தயாரித்துக் கொண்டால் அதுவே வெற்றிக்குப் பெரும் துணைபுரியும் என்பது உண்மை. ஆனால், தேர்வு மதிப்பெண்களில் சாதனைகளைப் புரிய நினைக்கிறவர்கள் அனைத்துப் பாடங்களயும் படிக்கவேண்டும். தேர்வுக்குப் படிக்கும்போது வேறெதிலும் மனம் செலுத்தாமல், படிப்பதில் செலுத்தவேண்டும். எந்தப் பாடம் படித்தாலும், படிக்கிறபோது அந்தப் பாடமாகவே மாறி விட வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு படிப்பு
அதேபோல் இரவு நேரம் முழுவதும் தூங்காமல் படிக்கக்கூடாது. மேலும் இரவு நேரத்தில் படிக்கும் காபி, டீ என அதிகம் சாப்பிடக்கூடாது. இது உடலுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும். அதேநேரத்தில் தண்ணீர், பழச்சாறு இளநீர் போன்ற பானங்களை பருகலாம்.
சத்தம் இல்லாத இடங்கள்... தனி அறையில் அமர்ந்து படிப்பு நல்லது. நீங்கள் படிக்கும் போது, உங்களை சுற்றி தேவையற்ற சப்தங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். படிக்கும்போது உங்களை சுற்றி தேவையற்ற சப்தங்கள் இருந்தால், உங்கள் கவனம் சிதறும். படிப்பது கெடும். எனவே, வீட்டில் அமைதியான சூழல் நிலவ பெற்றோர் உதவ வேண்டும். எனவே, தனியறையைத் தேர்வு செய்வது நல்லது.
யோகா பயிற்சி
மாணவர்கள் தங்கள் உடலை புத்துணர்ச்சியுடன் வைக்க காலையில் எழுந்ததும், 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி, யோகா பயிற்சிகளை செய்யலாம். இதனால் உங்கள் மூளை சுறுசுறுப்படையும். படித்த பாடங்கள் அனைத்தும் நினைவுக்கு வரும். தொடர்ந்து, குறிப்பிட்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கும் போது சோர்வு ஏற்படும். எனவே படிப்புக்கு இடையே, 10 நிமிடங்கள் நடப்பது, விளையாடுவது, உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அட்டவணை:
தேர்வு அட்டவணையின் படி, ஒரு பாடத்தை எவ்வளவு நாள் அல்லது நேரம் படிக்க வேண்டும் என திட்டமிடவும். இதனால், தேர்வுக்கு முன் அனைத்து பாடங்களை படிக்க நேரம் கிடைக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஓய்வு:
மேலும் படிக்கும்போது, கண்களுக்கும், உடலுக்கும் ஓய்வு தருவது அவசியம். தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒருநிமிடம் கண்களை மூடி கண்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் படிக்கத் தொடங்கலாம். மேலும், உள்ளங்கையிலோ அல்லது கண்கிண்ணத்திலே (Eye cups) (இயற்கை மருத்துவமனைகளில் மற்றும் மருந்துக் கடைகளில் கிடைக்கும்) தண்ணீரை எடுத்துக் கொண்டு விழிகளை அதில் நனைத்து சுழல விட்டுக் கழுவலாம். இதனால் கண் வெப்பம் குறைந்து புத்துணர்ச்சி பெறும். மேலும், கண் எரிச்சசல் இருப்பின் கால் பாதங்களைக் குளிர்ந்த நீர்ல் நனைக்க வேண்டும். தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்காமல் பாடத்தின் ஒரு பகுதியை படித்து முடித்துவிட்டால் (2 மணி நேரம் படித்தவுடன்) 10 நிமிடம் உடலைத் தளர்த்தி கண்களை மூடி உட்கார்ந்து கொண்டு படித்ததை நினைத்துப் பார்க்க வேண்டும். இது படித்ததை மீண்டும் நினைவில் கொண்டு ஆழமாக மனதில் பதியவைக்கவும் உதவும். உடல் ஓய்வு பெற்று புதிய தெம்புடன் மீண்டும் உங்களால் சிறப்பாக படிக்கவும் முடியும்.
முடிவுகளை நினைத்து.... அதேபோல் தேர்வு முடிவு எப்படி வருமோ, மதிப்பெண் குறையுமோ என்ற கவலையை மாணவர்கள் தங்கள் மனதில் ஏற்றிக் கொள்ளக்கூடாது. தேர்வுக்கு முன்போ, தேர்வு அறையிலோ, முடிவுகள் பற்றிய தேவையில்லாத எண்ணங்களை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். படித்ததை சிறப்பாக எழுதுவதிலும், அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்திருக்கிறோமா என்று சரிபார்ப்பதும் தான் அவசியம். கடின வகை வினாத்தாள் வந்தாலும், தேர்வறையில் தேவையில்லாத சிந்தனைகளை தவிர்த்தாலே, உரிய பதில்கள் நினைவுக்கு வந்துவிடும். முதலில் தெரிந்த கேள்விகளுக்கு பதில் எழுதிவிட்டு, பின்னர் கடினமான கேள்விகளுக்கு பதில் அளிப்பது நல்லது.
உளவியல் ஆய்வு:
உளவியல் ஆய்வுப்படி, மாணவர்கள் தனியாக படிப்பதை விட குழுவாக சேர்ந்து படிக்கும்போது மிகவும் வேகமாக கற்றுக்கொள்கிறார்கள். குழுவாக படிக்கும்போது, அவர்கள் தங்களின் நண்பர்களுடன் போட்டி போடுகிறார்கள். எனவே, மாணவர்கள் தங்களின் நண்பர்களை சந்திக்கவோ அல்லது நண்பர்களை தங்களின் வீட்டிற்கு அழைக்கவோ பெற்றோர்கள் அனுமதி வழங்க வேண்டும். இதனால் அவர்கள் படிப்பறிவு அதிகரிக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்களும் பெற முடியும். கேள்விக்கான பதிலை நினைவில் வைத்துக்கொள்ள சிறிய குறிப்புகளை தயார் செய்து எழுதி வைத்துக் கொள்ளலாம். இது கடைசி நேர திருப்புதலுக்கு (ரிவைஸ்) உதவியாக இருக்கும். பாடத்தில் வரும் விஷயங்களை உங்களுக்கு பிடித்த படத்துடன் தொடர்பு படுத்தி நினைவில் வைத்துக் கொள்ளுதல் நல்லது.
தேர்வறைக்கு முன்னதாக.. தேர்வு எழுத தேர்வு அறைக்கு செல்வதற்கு முன் நண்பர்களுடன், தேர்வு பற்றியோ அல்லது வினாக்கள் பற்றியோ விவாதம் செய்ய வேண்டாம். இது மனக்குழப்பத்துக்கு வழிவகுக்கும். எனவே, அமைதியாக நீங்கள் படித்ததை நினைவு படுத்தவும். அதேபோல் தேர்வு எழுதிவிட்டு வந்து மாணவர்களுடன் எழுதிய விடைகள் குறித்தும் விவாதிக்கவேண்டாம். இது தேவையற்ற குழப்பங்களை மனதில் ஏற்படுத்தும்.
பாடங்கள் படிப்பது எப்படி... ஒவ்வொரு மாணவச் செல்வங்களுக்கும் படிக்கும் முறையானது நிச்சயம் மாறுபடும். எனவே, உங்களின் படிப்பு நடைமுறையை மாற்ற வேண்டாம். ஆனால், தொடர்ந்து கடினபாடங்களை நீண்ட நேரம் படித்தால், அவை மூளையில் பதிவாகாமல் போக வாய்ப்புள்ளது. ஒரு எளிய பாடம், கடின வகை பாடம் என மாற்றி கொண்டே இருந்தால், படிக்க வேண்டிய பாடங்களை, விரைவில் படித்து விடலாம். இதன்மூலம் ஒரு நாளில் அதிக பாடங்களைப் படித்து மனதில் வைத்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும்.
மேலும், படிக்கும் பாடத்தை எப்போதும் மனப்பாடம் செய்யாதீர்கள். பாடத்தை ஒன்றுக்கு இரண்டு முறை வாசித்து புரிந்துக்கொண்டு பின், எழுதி பார்த்தல் பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற உதவியாக இருக்கும். அனைத்து பாடங்களையும் படித்து வைத்துக் கொள்வது நல்லது. இதனால் தேர்வில் எந்தக் கேள்வி கேட்டாலும் எழுத முடியும். இதனால் அதிக மதிப்பெண்களைப் பெற்று உயர்கல்வி நிறுவனத்தில் எதிர்பார்த்த கோர்ஸை படிக்க முடியும் என்று கல்வியாளர்கள் அடித்துக் கூறுகின்றனர். தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மாணவச் செல்வங்களே...
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.