தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே காந்தள் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நகராட்சி உருது நடுநிலை பள்ளியை உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கபட்டு வந்தது. இதனையடுத்து கடந்த சட்டபேரவை கூட்டத்தின் போது காந்தள் உருது நடுநிலை பள்ளி தரம் உயர்த்தபடுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான பணிகள் நடைபெற்ற நிலையில், இன்று தரம் உயர்த்தபட்ட உருது உயர் நிலை பள்ளியை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, உதகை லாரன்ஸ் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான அடைவு தேர்வு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. விரைவில் பள்ளிக்கு தேவையான வகுப்பறைகள் கட்டவும் ஆசிரியர்கள் நியமிக்க தேவையான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் எங்கெல்லாம் பள்ளியில் தரம் உயர்த்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதோ அங்கெல்லாம் பள்ளிகள் படிப்படியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எட்டாம் வகுப்பு படித்த பிறகு எங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வருவதை தடுக்கவும் மாணவர்களின் இடை நிற்றலை தவிர்ப்பதற்காக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 500 பள்ளிகள் தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளது. அதில், 31 பள்ளிகள் முதற்கட்டமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது காலியாக உள்ள 1721 ஆசிரியர்களுக்கான அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பும் போது முன்னுரிமை அளித்து நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள் காலியிடங்கள் நிரப்பப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மீது தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை வரும் 19-ம் தேதி விசாரணைக்காக பட்டியலிடப்பட இருக்கிறது. தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.