'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்ற, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான, 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமான, 'டேப்ஸை' செயல்படுத்த, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவர் ஏற்கனவே பரிந்துரைத்துள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு, 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது உட்பட, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், 'டேப்ஸ்' திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக, 13,000 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஆண்டுதோறும், 11,000 கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இந்தப் பங்களிப்புத் தொகை, பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அந்த திட்டத்தில், கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம்; ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்வு; 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை, பணிக்காலத்தை நிறைவு செய்யாதவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்ற அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
இவை எல்லாம், தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்திலும் இடம் பெற்றுள்ளன. அதாவது, மத்திய அரசு திட்டத்தை காப்பி அடித்ததை போன்றே உள்ளது. அதனால் தான், 'மத்திய அரசின் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, மத்திய அரசின் திட்டத்தில் இணைந்திருக்கலாம்' என, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
அதுமட்டுமின்றி, '2003 ஏப்ரல் 1ம் தேதிக்கு பின், தமிழக அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்' என்ற, தி.மு.க.,வின் வாக்குறுதி மீறப்பட்டுள்ளது. அதற்கு மாநிலத்தின் நிதி நிலைமையும் முக்கிய காரணம்.
சமீப நாட்களாக தமிழக அரசுக்கு எதிராக, அரசு ஊழியர்களின் பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி, நாளை முதல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த தீவிரம் காட்டி வந்த நிலையில், அவர்களை சமாதானப்படுத்தவும், தேர்தல் வரும் நேரத்தில் அவர்களை திருப்திப்படுத்தவும், அரசு மேற்கொண்ட முயற்சியே இந்த புதிய ஓய்வூதிய திட்ட அறிவிப்பு.
மேலும், புதிய ஓய்வூதிய திட்டம் எப்போது அமலுக்கு வரும், எத்தனை ஆண்டுகள் பணியாற்றினால் முழு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது உட்பட பல்வேறு கேள்விகளுக்கு, முதல்வரின் அறிவிப்பில் பதில் இல்லை. அரசாணையில் அனைத்து விபரங்களும் இடம் பெறும் என்று தெரிவித்து, அதிகாரிகளும் மழுப்புகின்றனர்.
அநேகமாக, வரும் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகே அமலுக்கு வரலாம் என்று தெரிகிறது. எது எப்படியோ, மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள பல அம்சங்களை தமிழக அரசு சேர்த்திருப்பதன் வாயிலாக, அந்த திட்டம் சிறப்பானது தான் என்பது மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
முதல்வரின் புதிய ஓய்வூதிய திட்ட அறிவிப்பின் மூலம், அரசு ஊழியர்களுக்கு தற்போதைக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.