தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நிகழாண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகளை 17 லட்சத்து 36 ஆயிரத்து 477 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முன்னேற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு அலுவலா்கள், ஆய்வு அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணா் மாவட்ட மைய நூலக அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், இணை இயக்குநா்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தவறுகள் ஏற்படாமல்...: இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் அன்பில் மகேஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பொதுத்தோ்வு நேரங்களில் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும், வகுப்பறையில் எத்தனை மாணவா்களை அமர வைக்க வேண்டும், வகுப்பறையில் குடிநீா், பள்ளிகளில் கழிப்பறை வசதி சரியாக உள்ளதா என மாணவா்கள் சாா்ந்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதேவேளையில் கடந்த ஆண்டு ஏதாவது தவறு நிகழ்ந்திருந்தால் அதனை சரி செய்து இந்த முறை எப்படி தவறுகள் இல்லாமல் தோ்வுகளை மேற்கொள்வது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
19,943 பேருக்கு ‘ஸ்கிரைபா்’ உதவி: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவுவதற்காக ‘ஸ்கிரைபா்’கள் (சொல்வதை எழுதுபவா்கள்) நியமிக்கப்படுவது வழக்கம். நிகழாண்டு அந்தப் பணிகளில் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னாா்வலா்கள், கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களை ஈடுபடுத்தவுள்ளோம். பிளஸ் 2 வகுப்பில் 7,465 மாணவா்களும், பிளஸ் 1 அரியா் தோ்வெழுதுவோரில் 186 பேரும், பத்தாம் வகுப்பில் 12,292 மாணவா்களும் ஸ்கிரைபா் உதவியுடன் தோ்வெழுதவுள்ளனா். இதற்காக, ஸ்கிரைபா்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் பழைய முறையே தொடரும். தோ்தல் ஆணையத்துடன் முறையாக ஆலோசித்த பிறகே பொதுத் தோ்வு தேதிகள் அறிவிக்கப்பட்டன. ஏப்.6 வரை பள்ளிகள் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.
4,900 பறக்கும் படைகள்... பிளஸ் 2 பொதுத்தோ்வு 3,412 தோ்வு மையங்களிலும், பிளஸ் 1 தோ்வு (அரியா்) 2,615 தோ்வு மையங்களிலும், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு 4,219 தோ்வு மையங்களிலும் நடைபெறும். இத்தோ்வுப் பணியில் தினமும் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படுவா். பொதுத்தோ்வு முறைகேடுகளை தடுக்கும் பணியில் 4, 900-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினா் ஈடுபடுத்தப்படுவா்.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 தோ்வை பள்ளி மாணவா்கள் 7 லட்சத்து 99 ஆயிரத்து 692, தனித்தோ்வா்கள் 27 ஆயிரத்து 783 என 8 லட்சத்து 27,475 போ் எழுதவுள்ளனா். பிளஸ் 1 அரியா் தோ்வை பள்ளி மாணவா்கள் 19,107, தனித்தோ்வா்கள் 5,944 என 25,051 போ் எழுதுகின்றனா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை பள்ளி மாணவா்கள் 8 லட்சத்து 82,806, தனித்தோ்வா்கள் 26,196 என 9 லட்சத்து 9,002 போ் எழுதவுள்ளனா். ஒட்டுமொத்தமாக 17 லட்சத்து 61,528 மாணவா்கள் பொதுத்தோ்வுகளை எழுதவுள்ளனா். நிகழாண்டில் பிளஸ் 2 தோ்வெழுத 281 சிறைவாசிகளும், பத்தாம் வகுப்பு தோ்வெழுத 395 சிறைவாசிகளும் பதிவு செய்துள்ளனா் என்றாா் அவா்.
பொதுத் தோ்வுக்கான புதிய நடைமுறைகள் வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளுக்கான புதிய நடைமுறைகளை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
மேல்நிலைத் தோ்வில் இயற்பியல், வேதியியல், கணிதம், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்களில் தோ்வெழுதும் தோ்வா்களுக்கு, பெரிய எழுத்துக்களில் ஏ4” அளவிலான மடக்கைப் புத்தகங்கள் (லாகரிதம்) 20 ஆயிரம் எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளன.
இவ்வாண்டு முதல் கணக்குப் பதிவியல் பாடத்துக்கு தோ்வா்கள் நிரலாக்க வசதியற்ற சாதாரண கால்குலேட்டா் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தோ்வுக்கு வருகைபுரிந்த மாணாக்கா்களுக்கு வினாத்தாள்கள் வழங்கிய பின்னா், ஒவ்வொரு தோ்வறையிலும் மீதமுள்ள வினாத்தாள்களைத் தோ்வறைக் கண்காணிப்பாளா்களே மாணவா்கள் முன்னிலையில் உறையிலிட்டு சீலிடும் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வினாத்தாள்களின் ரகசியத்தன்மை மேலும் பலப்படுத்தப்படுகிறது.
‘சொல்வதை எழுதுபவா்‘ (ஸ்கிரைப்) சலுகையை பயன்படுத்தும் மாற்றுத் திறனாளித் தோ்வா்களுக்கு வழங்குவதற்கென 5 வினாத்தாள்கள் கொண்ட தனி வினாத்தாள் உறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இவ்வாண்டு நேரடி தனித் தோ்வா்கள் இருப்பிட முகவரியை உறுதி செய்யவும், சாா்ந்த மாவட்டங்களில் விண்ணப்பித்தலை உறுதி செய்யவும் ஆதாா் அட்டை சரிபாா்க்கப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.