சென்னை பல்கலை பிஎச்.டி., ஆய்வறிக்கை கையெழுத்திடும் விவகாரத்தில் உயர் கல்வித்துறையின் நடவடிக்கை எதிர்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நுாற்றாண்டு பழமையான பல்கலைகளில் ஒன்றான, சென்னை பல்கலையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், பிஎச்.டி., எனும் ஆராய்ச்சி படிப்பை பயின்று வருகின்றனர்.
மாணவர்களின் ஆய்வு அறிக்கை, உள்நாடு மற்றும் வெளிநாடு அறிவியல் வல்லுநர்கள் பார்வைக்கு அனுப்பப்படும். இந்த வல்லுநர்களின் பெயர்களில், 12 பேரின் பெயரை, மாணவரின் வழிகாட்டியே, பல்கலையிடம் சமர்ப்பார். அதில், 3 பேரின் பெயரை பல்கலை தேர்வு செய்து, ஆய்வறிக்கையை, சம்பந்தப்பட்ட வல்லுநர்களுக்கு அனுப்பும்.
சென்னை பல்கலையில், துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால், துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள 3 பேர், அதற்கு கையெழுத்திட வேண்டிய நிலை இருந்தது.
அதே போல், வல்லுநர் குழுவுக்கு அனுப்பப்பட்டு, இறுதி செய்யப்பட்ட மாணவர்களின் ஆய்வறிக்கையின்படி, அவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்குவதற்கான கோப்புகளும் துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழுவிடம், 320 கோப்புகள் தேக்கம் அடைந்து இருந்தன.
இது குறித்து, நம் நாளிதழில், கடந்த மாதம் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, பிஎச்.டி., படிக்கும் மாணவர்களின் ஆய்வறிக்கை தொடர்பான கோப்புகளுக்கு, கையெழுத்திடும் அதிகாரம், ஆராய்ச்சி துறை வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டு, அந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. இந்நிலையில் இந்த நடைமுறை சரிதானா என, மாணவர்கள் தரப்பில் கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது:
ஒரு மாணவரின் பட்டப்படிப்பு சான்றிதழுக்கும், பிஎச்.டி., ஆய்வறிக்கைக்கும், துணை வேந்தரின் ஒப்புதல் அவசியம். துணை வேந்தர் இல்லாததால், இந்த பணிகளை துணை வேந்தர் ஒருங்கிணைப்பு குழு மேற்கொண்டு வருகிறது. ஆனால், சென்னை பல்கலையில் படிக்கும் பிஎச்.டி., மாணவர்களின் ஆய்வறிக்கை சார்ந்த கோப்புகளுக்கு கையெழுத்திடும் அதிகாரம், ஆராய்ச்சி துறை வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்கலை விதிகளுக்கு எதிரானதாக உள்ளது.
எதிர்காலத்தில் இந்த ஆய்வறிக்கைக்கான அங்கீகாரம் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. பேராசிரியர்கள், பிரச்னை இல்லை என தெரிவித்தாலும், எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. சரியான நேரத்தில் உயர் கல்வித்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வறிக்கைகள் சார்ந்த கோப்புகளுக்கு கையெழுத்திட்டிருந்தால், இந்த சிக்கல்கள் ஏற்பட்டிருக்காது. உயர் கல்வித்துறை அதிகாரிகள் தங்களுடைய அதிகாரத்தை பிரித்து கொடுத்து, எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர். உயர் கல்வித்துறை இந்த விவகாரத்தில், எங்களுக்கு உறுதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.