WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 24, 2014

அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதில் அரசுக்கு அக்கறை கிடையாது

அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதில், தமிழக அரசுக்கு, அக்கறை கிடையாது.
அதனால், கல்விக்கான நிதி ஒதுக்கீடு, காமராஜர் ஆட்சி காலத்தில், 35 சதவீதமாக இருந்தது, தற்போது, 14.6 சதவீதமாக குறைந்து விட்டது,'' என, கல்வியாளர்கள், காட்டமாக தெரிவித்துள்ளனர்.

நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வித் துறைக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை விட, கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகமாக இருக்கிறது.உண்மையில், இந்த நிதியில், பெரும்பகுதி, அதிகாரிகள், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, சம்பளமாக போய்விடுகிறது. 2011 12 கால கட்டத்தில், கல்வித் துறை ஊழியர்களுக்கான ஒரு நாள் சம்பளம், 25 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, 30 கோடி ரூபாயை தாண்டி இருக்கலாம்.சமீபத்தில், சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை புத்தகத்தில், திட்டப் பணிகளுக்கு என, 3,290.60 கோடி ரூபாய் செலவிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிதியில், பெரிய அளவிற்கு, எந்த திட்டமும் நிறைவேற்ற வாய்ப்பில்லை எனவும், இந்த நிதி முழுவதும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 14 வகையான இலவச திட்டங்களை நிறைவேற்றுவதற்கே, சரியாகிவிடும் எனவும், கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் வகையிலான திட்டங்கள், அறிவிப்பில் இடம்பெறவில்லை.

இந்த விவகாரம் குறித்து, கல்வியாளர், ராஜகோபாலன் கூறியதாவது:கல்வி மற்றும் மருத்துவ துறைக்கான நிதி ஒதுக்கீடு, பெருமளவு குறைந்து விட்டது. கடந்த, 40 ஆண்டுகளாகவே, இந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு, படிப்படியாக குறைந்து வருகிறது. காமராஜர் ஆட்சி காலத்தில், கல்வி மற்றும் மருத்துவ துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு, மொத்த பட்ஜெட்டில், 35 சதவீதம் என்ற அளவிற்கு இருந்தது. அப்போது, மொத்த பட்ஜெட்டே, 100 கோடி ரூபாய்க்குள் தான் இருக்கும்.இப்போது, கல்வி துறைக்கான நிதிஒதுக்கீடு, 14.6 சதவீதம் என்ற அளவில் தான் இருக்கிறது. அதுவும், எஸ்.எஸ்.., (அனைவருக்கும் கல்வி திட்டம்), ஆர்.எம்.எஸ்.., (மத்திய இடைநிலை கல்வி திட்டம்) நிதியும், இந்த சதவீதத்திற்குள் அடக்கம். தமிழக அரசின் நிதி என்று பார்த்தால், மிகவும் குறைவு தான்.பெரும்பகுதி நிதியை, இலவச திட்டங்களுக்காக திருப்பி விடுகின்றனர். பின், கல்விக்கு, எங்கே நிதி ஒதுக்கீடு செய்வர்? அரசு பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும் என்பதில், தமிழக அரசுக்கு, அக்கறை இல்லை.அரசு பள்ளிகளில், முதலில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்.

ஒரு ஆண்டிற்கு, எத்தனை ஆசிரியர் பணியிடங்கள், ஓய்வின் காரணமாக காலியாகிறதோ, அந்த பணியிடங்கள் முழுவதையும் நிரப்புவதில்லை. பாதி அளவிற்குத் தான் நிரப்புகின்றனர்.அதிலும், அறிவிப்பில், பல இடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்பி விடுவர். பதவி உயர்வினால் ஏற்படும் காலி பணியிடங்களையும், சரிவர நிரப்புவது இல்லை.தேவைக்கு ஏற்ப, ஆசிரியர்களை நியமித்தால், அதிகம் நிதி செலவழிக்க வேண்டி வரும். இதர செலவுகளும் அதிகரிக்கும். அதனால் தான், அரசுக்கு அக்கறை இல்லை.50 ஆயிரம், 70 ஆயிரம் ஆசிரியர் நியமனம் செய்துவிட்டதாக கூறுவது எல்லாம், உண்மை கிடையாது. இப்போதும், அரசு பள்ளிகளில், ஆசிரியர் தேவை, அதிகமாக உள்ளது.இவ்வாறு, ராஜகோபாலன் தெரிவித்தார்.


கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை:உள் கட்டமைப்பை வசதி குறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறியதாவது: அடிப்படை வசதிகள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த, தமிழக அரசு, அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றாலும், மத்திய அரசு நிதி உதவி மற்றும் 'நபார்டு' வங்கி நிதி உதவி மூலம், பல்வேறு வளர்ச்சிப் பணிகள், ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டிலும், பல வளர்ச்சிப் பணிகள், படிப்படியாக நிறைவேற்றப்படும்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.