WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 28, 2014

திருவள்ளுவர் பல்கலை. முதுகலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகளில் குளறுபடி.?

திருவள்ளுவர் பல்கலைக்கழக முதுகலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள்
வெளியிட்டதில் பல குளறுபடிகள் காணப்படுவதாக ஆட்சிமன்றக் குழு முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் அய்.இளங்கோவன் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கை:
பல்கலைக்கழகம் சனிக்கிழமை தனது இணையதளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
இதில் எம்.எஸ்சி கணினி அறிவியல் 4-ம் பருவத் தேர்வு முடிவுகள் பலருக்கு வெளியிடப்படவில்லை.
எம்.எஸ்சி கணினி அறிவியல் மாணவர்கள் பலருக்கு புராஜக்ட் முடிவுகள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன.
எம்.காம் மாணவர்கள் பலருக்கு புராஜக்ட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
எம்.எஸ்சி வேதியியல் 4-ம் பருவத்தில் 7 தாள்கள் தேர்வு எழுதிய மாணவர்கள் பலருக்கு முழுமையாக மதிப்பெண் வெளியிடப்படவில்லை.
அதேநிலை எம்.எஸ்சி கணிதம் 4-ம் பருவத்தில் 5 தாள்கள் எழுதிய மாணவர்களுக்கும் உள்ளது.
குளறுபடிகள் பல உள்ள நிலையில், விடைத்தாள் நிழற்பட நகல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 30 என அறிவிக்கப்பட்டுள்ளது எப்படி சாத்தியம் என தெரியவில்லை.
இது தொடர்பாக தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டுச் செல்லப்படும். முதல்வர் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார் இளங்கோவன்.
முடிவுகளை பார்ப்பதில் சிரமம்!
திருவள்ளுவர் பல்கலைக்கழக இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை காண்பதற்கு சுமார் 10 நிமிடத்துக்கும் மேலாக நேரம் செலவிடும் அளவில் இணையதளத்தை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
பல்கலை. நடவடிக்கையில் மாற்றம் தேவை! பல்கலைக்கழகம் குளறுபடியற்ற தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற நோக்கில்தான் பலரும் அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறோம்.
ஆனால் பல்கலைக்கழகம் இந்த சுட்டிக்காட்டும் நடவடிக்கைகளைக் கூட தவறாக கருதும் நிலை காணப்படுகிறது.
அத்தகைய போக்கை பல்கலைக்கழகம் இனி வருங்காலங்களில் கைவிட்டு மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத அளவிலும், இனியாவது வேகமான வளர்ச்சியைப் பெறுவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் பெற முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி ஆர்வலர்கள் கருத்து கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.