விடுதி வசதி இல்லாததால் மாணவர்கள் ஓட்டம்
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், எட்டு ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் முதுகலை தமிழ் பட்டப்படிப்பு துவக்கப்பட்ட நிலையில், நான்கு பேர் மட்டும் விண்ணப்பித்ததால் திட்டம் முடங்கி உள்ளது.சென்னையில், 1968ல் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், தமிழுக்கென்று தனித்து செயல்படக் கூடிய ஆய்வு நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என, அண்ணாதுரை யோசனை தெரிவித்தார்.
800 நூல்கள்
அவரது யோசனைப்படி, தனிநாயகம் அடிகள் முயற்சியால், 1970ல், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உருவானது. இந்நிறுவனம் சார்பில், இதுவரை, 800 நூல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.இந்நிறுவனத்தில், தமிழ் இலக்கியம் மற்றும் சுவடியியல் புலம்; தமிழ்மொழி மற்றும் மொழியியல் புலம்; சமூகவியல் கலை மற்றம் பண்பாட்டுப் புலம்; அயல்நாட்டு தமிழர் புலம் என, நான்கு புலங்கள், தற்போது செயல்பட்டு வருகின்றன.இவற்றின் கீழ், ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்.,), முனைவர் பட்டம் (பிஎச்.டி.,) ஆகிய ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இது தவிர, எட்டு ஆண்டுகளுக்கு முன், முதுகலைத் தமிழ் பட்டப் படிப்பும், சுவடிப் பதிப்பியல் பட்டய வகுப்புகளும் நடத்தப்பட்டு வந்தன.ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட படிப்புகளில் மாணவர்கள் அதிகளவில் சேர்ந்தாலும், மற்ற இரண்டு பிரிவிலும் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால், அவை நிறுத்தப்பட்டிருந்தன.
நான்கு விண்ணப்பம்
இந்நிலையில், சுவடிப் பதிப்பியல் இந்தாண்டு துவக்கப்பட்டு, அதில், முதல் கட்டமாக, 45 மாணவர்கள் பயிற்சி பெற்று சென்றுள்ளனர். தொடர்ந்து, தஞ்சை தமிழ்ப் பல்கலையின் அனுமதி பெற்று, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தாண்டு, முதுகலை தமிழ் பட்டப்படிப்பை துவக்க முடிவு எடுக்கப்பட்டது; முயற்சி எடுத்து அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால், நான்கு விண்ணப்பங்கள் மட்டுமே வந்தன.இதையடுத்து, இந்தாண்டு முதுகலை படிப்பு துவக்குவது முடங்கி விட்டது. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முழு முக்கிய காரணம் விடுதி வசதி இல்லாததே என்கின்றனர் மாணவர்கள்.
ஆர்வம்
இதுதொடர்பாக, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன ஆய்வு மாணவர்கள் சிலர் கூறியதாவது:
தமிழ் இலக்கியத் துறை படிப்புகளில் பெரும்பாலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மாணவர்கள் அதிகளவில் சேர்கின்றனர். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் இதில் விதிவிலக்கல்ல.
தமிழகத்தில், பல்கலைகள், கல்லூரிகளில் தமிழ் தொடர்பான இளங்கலை, முதுகலை உள்ளிட்ட படிப்புகள் இருந்தாலும், தமிழ் ஆய்வுக்கென உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள முனைவர், எம்.பில்., படிப்புகளில் ஆர்வமுடன் பலர் சேர்கின்றனர்.
பேராசிரியர்கள், நூலகம் உள்ளிட்ட வசதிகள் இருந்தாலும், விடுதி வசதி இல்லாததால், நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். நிறுவனம் சார்பில், சில விடுதிகளில் மாணவர்களுக்கு தங்க வசதி ஏற்படுத்தினாலும், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு விடுதி கிடைக்கவில்லை.அதனால் தான், இந்தாண்டு முதுகலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, 4.16 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
வாய்ப்பு
இக்கட்டடத்திலும், தமிழ் அறிஞர்கள் தங்கி, ஆய்வுப்பணி மேற்கொள்ள அறை அமைக்கப்படுகிறது. ஆய்வு மாணவர்களுக்கு தேவையான விடுதி வசதி இல்லை. விடுதி வசதியை தமிழக அரசு செய்து தந்தால், மாணவர்கள் அதிகளவில் சேர வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன தரப்பில் கேட்ட போது, '' இதுகுறித்து, அரசிற்கு, பரிந்துரை அனுப்பியுள்ளோம்; அனுமதி கிடைத்ததும், விடுதி வசதிக்கு ஏற்பாடு செய்யப்படும்,'' என்றனர்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.