மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில்,
அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சென்னையில் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தை முடக்க அரசு சார்பில் எடுக்கப்படும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை.
பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவ-மாணவியர் தங்களின் கோரிக்கைகளுக்காக 5 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால், அவர்களின் எந்த கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. இதையடுத்து 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சென்னையில் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
அஞ்சாமல் தங்களின் உரிமைக்காக போராடிய இவர்களுடன் 3 கட்ட பேச்சு நடத்திய தமிழக அரசு, இவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அறிவித்தது. தொடர்ந்து அமைச்சர்களுடன் இது குறித்து விவாதித்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி ஆசிரியர் வேலை வழங்குவது உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை அளித்தார்.
ஆனால், பெயரளவில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியதைத் தவிர வேறு எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து தான் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றோருக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத்திறனாளிகள் தொடர் உண்ணாநிலை போராட்டம் மற்றும் சாலை மறியல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை பொறுப்புடனும், அக்கறையுடனும் கவனித்துக் கொள்வது தான் ஒரு நல்ல அரசுக்கான இலக்கணமாக இருக்க முடியும். மாற்றுத்திறனாளிகள் வீதியில் இறங்கி போராடிய பிறகும் அவர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருந்தால் அது மக்களுக்கான அரசாக இருக்க முடியாது. இதை உணர்ந்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.