தாய்மொழி தமிழ்ப்பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணை எண்: 266ல்
உள்ள நடைமுறை சிக்கல்களால், பொதுத்தேர்வுகளில் தமிழ் பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, தமிழாசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், ஒவ்வொரு ஆண்டும் மற்ற பாடங்களை காட்டிலும், தமிழ் பாடத்தில் தோல்வி அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு, தவறான வழிகாட்டுதலுகளுடன் செயல்பாட்டில் இருக்கும் அரசாணை எண்: 266 காரணமாக திகழ்கிறது என கருத்து நிலவுகிறது.
இந்த அரசாணையின் காரணமாகவே, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 3,000 தமிழாசிரியர் பணியிடங்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை.
அதாவது, அரசாணை 266ன்படி, 150 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் ஐந்து பாட ஆசிரியர்களும், கூடுதலாக 30 மாணவர்கள் இருந்தால், கூடுதலாக ஒரு அறிவியல் ஆசிரியர், 60 மாணவர்கள் இருந்தால் ஒரு கணித ஆசிரியர், 90 மாணவர்கள் இருந்தால் ஒரு சமூக அறிவியல் ஆசிரியர், 120 மாணவர்கள் இருந்தால் ஒரு ஆங்கில ஆசிரியர் என பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஒரு பள்ளியில், 300 மாணவர்கள் இருந்தால் மட்டுமே, கூடுதலாக ஒரு தமிழ் ஆசிரியர் இறுதியாக பணி நியமனம் செய்யப்படுவார்.
புதிதாக தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் இந்த அவலநிலை அதிக அளவில் காணப்படுகிறது. 40 சதவீத அரசு பள்ளிகளில், 300க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர். இப்பள்ளிகளில், ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரே ஒரு தமிழ் ஆசிரியர் மட்டுமே, பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
இதன் காரணமாகவே, தமிழ் பாடத்தில் தோல்வி விகிதம், கடந்த நான்கு ஆண்டுகளாக அதிகரித்து காணப்படுகிறது. உதாரணமாக, கடந்த 2014ம் ஆண்டு, கோவை மாவட்டத்தில், 10ம் வகுப்பில், தமிழ் பாடத்தில் 1,895 மாணவர்களும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,868 மாணவர்களும் தோல்வியை தழுவியுள்ளனர். இதே நிலைதான் பிற மாவட்டங்களிலும் காணப்படுகிறது.
தமிழக தமிழாசிரியர் கழக தலைவர் மருதவாணன் கூறியதாவது: அரசாணை எண் 266, கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. இதன் படி, 3,000 தமிழ் ஆசிரியர்கள் பணியிடங்கள் இதுவரை உருவாக்கப்படாமல் உள்ளது. பிற பாட ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், தமிழ் பாடத்துக்கு வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாகவே, மாணவர்கள் மத்தியில் உச்சரிப்பு, எழுத்துப்பிழை, வாசிப்புத்திறன் போன்றவை மோசமான நிலையில் உள்ளது.
தமிழ் பாடத்தை, இலக்கணம், செய்யுள் போன்ற பகுதிகள், தமிழ் ஆசிரியர்களால் மட்டுமே, புரியும்படி எடுக்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக பொதுத்தேர்வுகளில் தமிழ் பாடத்தில் அதிக அளவில் தோல்வி விகிதம் காணப்படுகிறது.
இதற்கும், தவறான வழிகாட்டுதலுடன் இயற்றப்பட்டுள்ள அரசாணை எண் 266 காரணமாகவுள்ளது. உடனடியாக, தாய்மொழி தமிழ்ப் பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணை எண் 266ஐ திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.