WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 9, 2015

'தமிழகம் முழுவதும், இரு சக்கர வாகன ஓட்டிகள், ஜூலை 1 முதல், கண்டிப்பாக, 'ஹெல்மெட்' அணிய வேண்டும்; 

கட்டட இடிப்பு பணிகளை, 'கான்ட்ராக்ட்' எடுப்பவர், குமார். சென்னை,
விருகம்பாக்கத்தில், மண்டல போக்குவரத்து அதிகாரி அலுவலகம் முன், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந் தார். எதிரே வந்த வேன் இடித்ததில், வாகனத்தில் இருந்து குமார் கீழே விழுந்தார்.தலையிலும், உடம்பிலும், பலத்த காயங்கள் ஏற்பட்டன. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இரண்டு நாட்களில் உயிரிழந்தார். 2011, மே மாதம் சம்பவம் நடந்தது. சென்னை, சிறு வழக்குகள் நீதிமன்றத்தில், 17.50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, அவரது வாரிசுகள் வழக்கு தொடுத்தனர். 12.23 லட்சம் ரூபாய், இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இழப்பீடு தொகையை அதிகரித்து வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், குமாரின் வாரிசுகள் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் டி.ஜி.பாலசந்திரன், தமிழக அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் வேணுகோபால், மத்திய அரசு தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஜி.ராஜகோபாலன், காப்பீட்டு நிறுவனம் சார்பில், வழக்கறிஞர் சீனிவாசன் ராமலிங்கம் ஆஜராகினர். உயிரிழப்பு தடுப்பு: மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில், காப்பீட்டு நிறுவனம் சார்பில், பல வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முக்கியமாக, 'விபத்தின் போது, ஹெல்மெட் அணியவில்லை; அணிந்திருந்தால், உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது' என்று வாதிடப்பட்டது.கவனக்குறைவாக, அஜாக்கிரதையாக, வேனை ஓட்டியதால் தான், விபத்து ஏற்பட்டதாக, சிறு வழக்குகள் நீதிமன்றம் முடிவுக்கு வந்துள்ளது.இழப்பீட்டைப் பொறுத்தவரை, 20.08 லட்சம் ரூபாய் என, இந்த நீதிமன்றம் நிர்ணயிக்கிறது. இந்த தொகையை, வேன் உரிமையாளரிடம் இருந்து, காப்பீட்டு நிறுவனம் வசூலித்துக் கொள்ளலாம்.ஹெல்மெட் அணிவது எவ்வளவு முக்கியம் என்பதையும், அணியாததால் நேர்ந்த விளைவுகளையும் காட்டுவதாக, இந்த வழக்கு அமைந்துள்ளது. தர்மம் தலை காக்குமா? தமிழில், 'தர்மம் தலை காக்கும்' என சொல்வர்.தலைகாக்குமோ, இல்லையோ, ஆனால், கண்டிப்பாக, ஹெல்மெட் உயிரை காக்கும். ஹெல்மெட் அணியாததால், விலை மதிக்க முடியாத, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஹெல்மெட் அணிய வேண்டும் என, சட்டம் மற்றும் தீர்ப்புகள் இருந்தும், அந்த உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. சாலைகளில் பார்க்கும் போது, ஹெல்மெட் அணியாமல், வாகனங்களில் செல்வதை பார்க்க முடிகிறது.கடந்த ஆண்டில் மட்டும், தமிழகத்தில், 6,419 பேர், ஹெல்மெட் அணியாமல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளனர். தினசரி என கணக்கிட்டால்,17 பேர் இறக்கின்றனர். தலையைப் பாதுகாக்க, ஹெல்மெட் அணிய வேண்டும் என, மோட்டார் வாகன சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சட்டத்தை, மக்கள் பின்பற்ற வேண்டும். அதை, அமல்படுத்த வேண்டிய கடமை அதிகாரிகளுக்கு உள்ளது.இரு சக்கர வாகன ஓட்டிகளில், 50 சதவீதத்துக்கும் மேல், ஹெல்மெட் அணிவதில்லை. விபத்தில் இருந்து உயிர்இழப்பைத் தடுக்க, இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும், கண்டிப்பாக, ஹெல்மெட் அணிவதை, தமிழக உள்துறை மற்றும் டி.ஜி.பி., கவனிக்க வேண்டும். சட்டம் இருந்தும், உயிர்களை காத்துக் கொள்ள, வாகன ஓட்டிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை தாங்களாகவே மேற்கொள்ள வேண்டும். அவர்களை நம்பி தான், குடும்பம் உள்ளது. இடையூறு செய்யக்கூடாது: எனவே, குடும்பத்துக்கு மட்டுமல்லாமல், அவர்களின் பாதுகாப்புக்கும், ஹெல்மெட் முக்கியம்.நீதிமன்ற உத்தரவை, போலீசார் தவறாக பயன்படுத்தக் கூடாது. வாகன ஓட்டிகளுக்கு,தேவையில்லாமல் இடையூறு செய்யக் கூடாது; லஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு இடம் தரக் கூடாது.தேவையின்றி இடையூறு செய்வதாக, லஞ்சம் கேட்பதாக, புகார்கள் வந்தால், அதை போலீஸ் அதிகாரிகள் கவனித்து, தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விசாரணை, வரும், 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார். தரமானஹெல்மெட் அவசியம்: நீதிபதி கிருபாகரன் தன் உத்தரவில் மேலும் கூறியதாவது:* 'ஜூலை, 1ம் தேதி முதல், இரு சக்கர வாகன ஓட்டிகள், கண்டிப்பாக, ஹெல்மெட் அணிய வேண்டும்; இல்லையென்றால், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட, வாகன ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்' என, வரும், 18ம் தேதிக்கு முன், பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.*இந்திய தர நிறுவனம் சான்றளித்த, ஹெல்மெட்டை, ரசீதுடன் தாக்கல் செய்தால், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் திருப்பித் தரப்படும்.*இந்த உத்தரவை, தமிழக உள்துறை மற்றும் டி.ஜி.பி., நிறைவேற்றவில்லை என்றால், வரும், 19ம் தேதி, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.*ஹெல்மெட் அணிந்து செல்கின்றனரா என்பதை கண்காணிக்க, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, உள்துறை மற்றும், டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்படுகிறது.*ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு, 'நோட்டீஸ்' கொடுத்து, விசாரணைக்குப் பின், உரிமத்தை ரத்து செய்யலாம்.*பக்கவாட்டில் பார்க்கும் வகையில், ஹெல்மெட் வடிவமைப்பது குறித்து, மத்திய அரசு கவனிக்க வேண்டும்.*இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, எவ்வளவு வழக்குகள் தாக்கல் ஆகிஉள்ளன என்ற விவரங்களை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.*ஹெல்மெட் கண்டிப்பாக அணிவதை கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.*ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை விளக்கும் வகையில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை, மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர், தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.