WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 18, 2015

தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை ஓர் ஆண்டுக்குள் அமலுக்கு கொண்டு வரவேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை ஐகோர்ட்டில், பா.ம.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆர்.வேலு
ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் 1973ன் கீழ் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்கள் செயல்பட வேண்டும். ஆனால், இந்த சட்டம் இருக்கும்போது, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த புதிய அறிவிப்பு பெரும் தொகையை கட்டணமாக வசூலிக்கும், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளை ஊக்குவிப்பதற்காக கொண்டு வந்தது போல் உள்ளது. அதேநேரம், தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தவோ, ஒழுங்குப்படுத்தவோ சட்டம் எதுவும் இல்லை. எனவே, தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளை சட்ட விரோதமானது என்று அறிவிக்கவேண்டும். அந்த விதிகள் செல்லாது என்றும் அந்த விதிகளின் கீழ் செயல்படும் அனைத்து மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக பள்ளிக் கல்வித்துறை இணை செயலாளர் அழகேசன் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் உள்ள மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், தொடக்க மற்றும் மழலையர் பள்ளி என்று அனைத்து வகை தனியார் பள்ளிகளையும் ஒழுங்குப்படுத்த ஒருங்கிணைந்த சட்டத்தை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த ஒருங்கிணைந்த சட்டம், தமிழ்நாடு சமச்சீர் கல்வி சட்டம், கட்டாய இலவச உரிமைச் சட்டம் ஆகியவற்றை உள்ளடங்கியதாக இருக்கும். இந்த சட்டத்தை உருவாக்க உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தார். இதையடுத்து நீதிபதிகள், ‘தனியார் பள்ளிகளை ஒழுங்குப்படுத்த ஒருங்கிணைந்த புதிய சட்டத்தை அமலுக்கு கொண்டு வர எவ்வளவு காலம் ஆகும்?’ என்று கேள்விகள் எழுப்பினார்கள். இதற்கு, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, ‘இது சம்பந்தமாக தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார் ஆஜராகி, ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகளை ஒழுங்குப்படுத்தும் ஒருங்கிணைந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வர ஓர் ஆண்டு கால அவகாசம் வேண்டும்’ என்று கூறினார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த புதிய சட்டத்தை உருவாக்குவதற்கு உயர்நிலை குழுவை தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் உருவாக்க வேண்டும். அதன்பின்னர் இந்த உயர்நிலை குழு, வரைவுச் சட்டத்தை உருவாக்க வேண்டும். அந்த வரைவுச் சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்தை கேட்டறியவேண்டும். அதன் பின்னர், புதிய சட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்குள் செய்து முடிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.