WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, December 22, 2015

10-ம் வகுப்பில் நூறு சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களை வெளியேற்றுவதாக தனியார் பள்ளி மீது புகார்.

மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம், பத்தாம் வகுப்பில் நூறு சதவீத தேர்ச்சி பெறுவதற்காக, 5 மாணவர்களை
வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் நேற்று புகார் அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல் பட்டு கல்வி மாவட்டத்தில் தனியார் பள்ளி நிர்வாகம், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெறுவதற்காக, மாதிரி தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை வலுக்கட்டாயமாக பள்ளியில் இருந்து வெளியேற்றி வருவதாக கருங்குழியைச் சேர்ந்த பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியிடம் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து, மனு அளித்த பெற்றோர்கள் கூறியதாவது: தனியார் பள்ளி நிர்வாகம், ‘மாதிரி தேர்வுகளில் உங்களது பிள்ளைகள் சரியான தேர்ச்சியை எட்டவில்லை. அதனால், பள்ளியில் நூறு சதவீத தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும். எனவே, உங்கள் பிள்ளையின் டி.சி.யை பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறி அதில் வலுக்கட்டாயமாக கையெழுத்து பெறுகின்றனர். டி.சி வாங்க சொல்லி மிரட்டல் கையெழுத்திட மறுக்கும் பெற்றோர்களிடம் உங்கள் பிள்ளைகள் வேறு பள்ளியில் படிக்க வேண்டாமா என்று மிரட்டுகின்றனர். அதனால், பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கையெழுத்திட வேண்டியுள்ளது. பள்ளி நிர்வாகம் வழங்கும் சான்றிதழில் 9-ம் வகுப்பில் வெளியேறி உள்ளதாக பதிவு செய்து வழங்குவதால் பிள்ளைகளின் ஓர் ஆண்டு கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மனதளவில் பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள் ளனர். அவர்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மீண்டும் 10-ம் வகுப்பில் பள்ளியில் சேர்க்க அனுமதிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா ‘தி இந்து’விடம் கூறியதாவது: அரசு மற்றும் அனைத்து விதமான தனியார் பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் ஆகியவற்றை காரணமாக கூறி மாணவர்களை வெளியேற்றக்கூடாது என எச்சரித்துள்ளோம். கருங்குழியில் தற்போது கூறப்படும் புகார் குறித்து, பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை வெளியேற்றியது நிரூபணமானால் சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். இதுமாதிரியான புகார்கள் தொடர்வதால், தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘பள்ளிக்கு சரியாக வராத, கல்வியின் மீது ஆர்வமில்லாத பிள்ளைகளை நாங்கள் வெளியேற்றி உள் ளோம். பெற்றோர்களிடம் அனைத்து விவரங்களையும் தெரிவித்த பின்னரே டி.சி. வழங்கப்பட் டுள்ளது’ என்று பதில் கிடைத் தது. செங்கல்பட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் இதேபோன்ற காரணங்களை கூறி, 9 மாணவர்கள் வெளியேற் றப்பட்டது குறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் ஜூன் 27-ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து அப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார். இதன்மூலம் வெளியேற்றப்பட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வெழுதியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.