WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, December 23, 2015

மூழ்கும் பள்ளித் தேர்வுகளும் 'விலையில்லா தேர்ச்சி'யும்!(Article).

                                 ஓர் ஆசிரியரின் குமுறல்கள்... 10 கேள்விகள்!

மழை ஓய்ந்து, வெள்ளம் வடிந்து, தற்போதுதான் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் தம் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன.
பள்ளிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன அல்லது இல்லை என்றும் சொல்லி வருகிறோம். இதற்கிடையில் மழையைவிட மோசமான ஓர் அனல் பறக்கும் விவகாரம் "அரையாண்டுத் தேர்வு". இந்தத் தேர்வு குறித்துப் பலவிதமான விவாதங்கள் பொதுமக்களிடமும், ஊடகங்களிலும், முகநூலிலும் பரபரப்பாக்கப்பட்டு வருகின்றன. தனியார் தொலைக்காட்சி ஒன்று பரபரப்பான விவாதத்தை நடத்திவிட்டது. அதற்குத் தோதான பல்வேறு கருத்துக்களைக்கொண்ட கட்சிகளின் கருத்தாளர்களை அழைத்து விவாதமேடையை அறிவார்த்த சண்டை மேடையாக மாற்றியது. இது ஒருபக்கம் என்றால், "நாங்கள் மட்டும் என்ன இளிச்சவாயன்களா?" என்று அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தம் பங்கிற்குப் பங்களிப்பு செய்து அறிக்கைவாதிகள் ஆகிவிட்டனர். இந்தக் குடுமிப்பிடிச் சண்டையில் இரண்டு விஷயங்கள்தான் மையமாகின்றன. 1. அரையாண்டுத் தேர்வை ரத்து செய்யவேண்டும். 2. எல்லா தேர்வையும் ரத்து செய்து, எல்லாரையும் தேர்ச்சி செய்யவேண்டும். இந்த இரண்டு தினுசுகளின் மெய்மையைப் பற்றித்தான் நாம் பார்க்கப்போகிறோம். ஜூன் மாதத்தில் தொடங்கி மிகச் சரியாக ஒன்றரை மாதம் கழித்து ஒரு தேர்வு (மாதத்தேர்வு அல்லது முதல் இடைப்பருவம் என்ற பெயரில்) பின்பு ஒரு மாதம் கழித்துக் காலாண்டுத் தேர்வு. அது கழிந்து ஒரு மாதத்தில் இரண்டாம் இடைப்பருவத் தேர்வு. அதற்குப்பின் அரையாண்டுத் தேர்வு. இதில் தனியார் பள்ளிகள் மாதத்தேர்வுடன், இடையில் அரசுத்தேர்வையும் வைத்துக் கொல்வது வேறுவிதம். சில மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் அலகுத்தேர்வுகள் என்று அரையாண்டுத் தேர்வுக்கு முன்பாக நான்கு தேர்வுகள் நடத்தி வெற்றிகொண்டுள்ளன. (இடையே முதல் பருவம் என்ற தேர்வும் வைப்பார்கள்). கனவான்களே! உங்களுக்கே இப்படி குழப்புகிறது என்றால் மாணவர்கள் கதியை நினைத்துப் பாருங்கள்! இந்தத் தேர்வுகளை எல்லாம் கடந்து அரையாண்டுத் தேர்வு வரும்பொழுது புத்தகம் முடிக்கப்பட்டுவிடும். (பார்க்க பத்தாம் வகுப்புப் பாடத்திட்டம்). அதாவது அரையாண்டுத் தேர்வுக்கு முன்பாகவே பாடங்கள் அனைத்தும் முடிக்கப்படவேண்டும். இன்னும் சொல்லப்போனால் நவம்பர் மாதமே முடிக்கப்பட்டு, டிசம்பர் மாதம் முதலிரண்டு வாரங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, வருடாவருடம் டிசம்பர் இரண்டாம் வாரம் முடிவில் தொடங்கும் அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 23-க்குள் முடித்து வைக்கப்படும். சற்றே முடிவுக்கு வருவோம். எல்லா பயிற்சித் தேர்வுகளுக்கும் முடிந்தபின் வரும் அரையாண்டுத்தேர்வு என்பது முன்-பொதுத்தேர்வு எனக் கருதப்படுகிறது. அதாவது அரையாண்டுத் தேர்வில் ஒரு பள்ளி அடையும் விழுக்காட்டிலிருந்து 10% கூட்டினால் பொதுத்தேர்வு விழுக்காடு. அதனால்தான் அரையாண்டுத்தேர்வு மீது இந்தப் பதற்றம். பரபரப்பு. அதாவது அரையாண்டுத் தேர்வு என்ற மாயைமீது ஏற்படும் பொய்யான பரப்பரப்பு, பதற்றம். மழையின் காரணமாகவும், மக்கள் அடைந்த சொல்லொணா பாதிப்பையும் முன்வைத்து "அரையாண்டுத் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்கிற குரல் ஒரு தினுசு என்றால், "எல்லாரையும் தேர்ச்சி அடைய செய்யவேண்டும்" என்பது இன்னொரு தினுசு. இதையெல்லாம் கடந்து, கல்வித்துறை கலந்தாலோசித்து, யாரும் எதிர்பார்க்காத இன்னொரு தினுசை இறக்கியுள்ளது. "அரையாண்டுத் தேர்வு ஜனவரி 11 முதல் நடத்தப்படும்." இந்த மூன்று தினுசுகளையும் நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. அரையாண்டு தேர்வு ரத்து செய்தால் என்ன? செய்யவிட்டால் என்ன? அதுதான் மழையால் அடித்துச் செல்லப்பட்டு ஜனவரியில் ஒதுங்கியுள்ளதே. அரையாண்டுத் தேர்வுக்கு முன்பாக நடந்த, காலாண்டுத் தேர்வுத் தாளைக் கொடுத்து இப்பொழுது எழுதச் சொன்னாலும், நம் அருமை மாணவச் செல்வங்கள் முன்பு எடுத்த மதிப்பெண்ணைத்தான் எடுக்கப்போகிறார்கள். இதில் அரையாண்டுத் தேர்வு நடந்தால் என்ன? நடக்காமல் போனால் என்ன? இன்னொரு கூத்தும் நடந்துவிட்டது, மழைபெய்யாத மாவட்டங்களில். என்ன அது? அரையாண்டுத்தேர்வு ரத்து என்றது அரசு. அதனால் என்ன? எங்கள் தெருவில்தான் மழையே இல்லையே! என்று சொல்லிக்கொண்டு, அதற்குப் பதிலாக முன்-ஆயத்தத்தேர்வு என்ற பெயரில், நான்கைந்து மாவட்டங்கள் தப்பும் தவறுமான வினாத்தாளைத் தந்து தேர்வு வைத்துவிட்டன. இன்னும் சில நாட்களில் தாட்பூட் என்று அதிகாரிகள் மீட்டிங் போட்டு, ரிசல்ட் ஏன் குறைந்தது? என்று வறுவறு என்று ஆசிரியர்களை வறுத்தெடுப்பார்கள். அவர்களும் வறுபடுவார்கள். இதை நிறுத்தவேண்டும் என்று ஆசிரியர்கள் போய் அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார்கள். கண்டிப்பாக "அரையாண்டுத் தேர்வு இப்போது இல்லை. ஆனால் அதற்குப் பதிலாக அதே தேதியில், முன் ஆயத்தத் தேர்வு நடத்தப்படும்" என்ற ஆப்பு வைத்துவிட்டார்கள். இந்த முன்-ஆயத்தத்தேர்வு பற்றி அரசு ஏன் மவுனம் சாதிக்கிறது? இப்படி ஏன் நடத்துகிறீர்கள் என்று மாண்புமிகுக்களும், கல்வியாளர்களும் இந்தக் கூத்தைக் ஏன் கேட்கவில்லை? எல்லாம் அரசியல்தான் கனவான்களே! அரையாண்டுத் தேர்வு ரத்து செய்தால் மட்டும் மாணவர்களின் மன அழுத்தம் குறையும் என்று மனோதத்துவ நிபுணர்களாக மாண்புமிகுக்கள் அறைகூவல் விட்டனர். உண்மையில் மாணவர்கள் அதைப் பற்றிய சிந்தனையே கொள்ளவில்லை என்பதுதான் உண்மை! சித்தன்போக்கு சிவன்போக்காக ஆகிவிட்டது! புத்தகங்கள் இல்லாமை, வாழ்வியல் சூழல், மன அழுத்தம் இவற்றினைக் கொண்டு தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பதைப் பாராட்டலாம். ஆனால் இது தற்காலிகத் தீர்வு மட்டுமே. உண்மையில் மாண்புமிகுக்கள், மாணவர்களின் மன அழுத்தத்தினைக் காரணம்காட்டி, எப்போதுமான தேர்வு என்ற ஒன்றையே மறுத்திருந்தால் தவறில்லை. ஆனால் அரசியலை முன்னிறுத்திக் கேவலத்தைக் கல்வியில் காட்டிவிட்டார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக, வழக்கமான எதிர்க்கட்சிகளின் குறட்டை இது. இரண்டாம் தினுசு, "எல்லாரையும் தேர்ச்சி அடைய செய்துவிடவேண்டும்". தேர்வு என்பது பயம் என்பதைவிட, ஒரு மாணவனின் கற்றலை அளவிடசெய்யும் முயற்சி அது. (இந்த அளவிடல்தேர்வு பொய்யானது) ஒரு வகையில் தேர்வு என்றவொன்றே இல்லை என்றால், இந்தக் கல்வித்திட்டத்தில் மாற்று என்ன? அதைக் கண்டுபிடிக்காதவரை தேர்வை ஒழித்துப் பயனில்லை. ஏனெனில் இன்றைய கல்விமுறையில் தேர்வு என்பது, பாடத்தின் பின் இருக்கும் வினாக்கான விடையை வாந்தி எடுப்பதுமட்டுமே. இதில் யாவரையும் தேர்ச்சி அடைய செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன? "விலையில்லா தேர்ச்சி" என்கிற ஒன்றை அரசுக்கு மறைமுகமாகப் பரிந்துரைக்கிறாரோ, அவர்! எப்படி பார்த்தாலும் இப்போதைக்குத் தன்மானமிகு தமிழ்நாட்டில் 1-9, 11 வரை 'ஆல் பாஸ்' தான். சம்பிராயமாக ஒன்றிரண்டு பேரை ஃபெயில் செய்வார்கள். நீங்கள் நேர்மையான தலைமையாசிரியராக இருந்து, 9, 11 ஆம் வகுப்பில் சிலரை வடிகட்டியிருந்தால், தேர்வு விழுக்காடு மையத்தில் நீங்கள் உங்கள் கையாலேயே, அனைவரும் தேர்ச்சி என்று மாற்றித்தான் தரவேண்டும். ஏன் இந்தப் பொல்லாப்பு? ஆகவே, மாண்புமிகுக்கள் கொதித்தெழத் தேவையில்லை. நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் யாருடைய ஆட்சியானாலும் இதுதான் நடந்து வருகிறது. இக்கரைக்கு அக்கரை பச்சை, கனவான்களே! எனவே, பத்தாம் வகுப்பில் தேர்வே இல்லாமல் செய்வது. பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வே இல்லாமல் செய்வது யாருக்கு லாபம் என்பது பொதுமக்களுக்குத் தெரியாதா என்ன? சும்மா இருக்கும் என்ஜினீயரிங் காலேஜ்கள் எல்லாம் சும்மாகவே இருக்கணுமா என்ன? அடுத்ததாக, அரையாண்டுத் தேர்வு ஜனவரியில் நடத்தப்படும் தினுசு. இதுதான் அடுத்த அட்ராசக்கை ஹைலைட். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சம்பா பருவத்தில் செய்யாமல்விட்ட சாகுபடியை, தாளடிப்பருவத்தில் செய்து, அதற்குச் சம்பா பருவப் பயிர் என்றால் சிரிப்பீர்களா? மாட்டீர்களா? அதுதான் இப்போது நடக்கிறது. எப்படி? ஜனவரி மாதத்தில் எப்போதும் நடப்பது முதல் திருப்புதல் தேர்வு (மீண்டும் காண்க பாடத்திட்டம்). அடுத்த பத்து நாள் கழித்து நடப்பது இரண்டாம் திருப்புதல் தேர்வு. வழக்கமாக நடைபெறவேண்டிய முதல் திருப்புதல் தேர்வுக்குப் பதிலாக அதை "அரையாண்டுத் தேர்வு" என்று என்னதான் பெயரை மாற்றினாலும், அது "முதல் திருப்புதல் தேர்வாகவே" மனதில் நிற்பதை என்னவென்பது? ஏனெனில் அரையாண்டுத் தேர்வுக்கான முழுப்பாடங்களும் முதல். இரண்டு, மூன்றாம், ஆண்டு பொதுத்தேர்வு வரை நீடிக்கும். எனவே ஒரே குட்டையில் ஊறிய மட்டையைப்போல, பாட்டிலை மாற்றாமல் அதன் லேபிளை மாற்றி என்ன செய்யப்போகிறீர்கள். கனவான்களே! அப்படி எனில், இரண்டாம் திருப்புதல் தேர்வு முதல் திருப்புதல் ஆகும். மூன்றாம் திருப்புதல் தேர்வு இரண்டாம் திருப்புதல் தேர்வாக ஆகும். ஆமாம்! மூன்றாம் திருப்புதல் தேர்வு எப்போது நடத்தப்படும்? இப்படியே நீண்டுகிட்டுபோனால் என்ன ஆகும்? எதுவும் ஆகாது. வழக்கம்போல ஒரு மாணவன் காலாண்டில் என்ன மார்க் எடுத்தானோ அதில் எந்த மாற்றமும் நிகழாது. ஏறக்குறைய 10 மதிப்பெண் பொதுத்தேர்வில் எடுத்தாலே ஜாஸ்தி.


எனவே இதையெல்லாம் கடந்து சில விஷயங்கள் கேள்விகளாகத் தொகுத்து நிற்கின்றன.


1. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரையாண்டுத் தேர்வு நிறுத்தியது சரி. மழையில்லாத மாவட்டத்தில் ஏன் நடத்தப்படவில்லை?
2. வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அவர்கள் வாசிக்க, எழுத அனைத்துப் பாடநூல்களும், பாடக்கருவிகளும் முழுமையாகச் சேர்ந்துவிட்டனவா?
3. வெள்ளம் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் நிலை சீரமைக்கப்பட்டுவிட்டனவா?
4. இப்போதைக்கு மழை அதிகாரியின் பணி என்ன?
5. முதல் திருப்புதல் தேர்வு, அரையாண்டுத் தேர்வாக மாற்றப்பட்டதற்கான நிர்பந்தம் எங்கிருந்து உருவானது? அல்லது என்னவிதமான மாற்றம் ஏற்படப்போகிறது?
6. மாணவர்களின் இறுக்கத்தைப் போக்குவதற்கு என்னவிதமான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் கைகொள்ளவேண்டும்? என்கிற பயிற்சி அளிக்கப்பட்டுவிட்டதா?
7. அரசு செய்தாலும்கூட, கல்விக்காக அறைகூவல்விடும் மாண்புமிகுகள் யாவரும் மாணவர்களுக்குத் தேவையானவற்றைத் தந்து முடித்துவிட்டார்களா?
8. ஒவ்வொரு வருடமும் பொதுத்தேர்வில் சதவீதம் குறையாமல், 1% ஆவது ஏறுகிறதே, எப்படி? அப்படி எனில் சில ஆண்டுகளில் 100 சதவீதத்தை நாம் எட்டிவிட்டால், 100 சதவீத கல்வி அறிவு உடைய மாநிலமாக அறிவித்துக் கொள்ளலாமா?
9. அரையாண்டுத் தேர்வு குறித்த உரையாடலில் மாணவர் சங்கமோ, மாற்றுக் கல்வியாளர்கள், மரபுக்கல்வியாளர்கள், உளவியலாளர்கள் ஏன் இல்லை.
10. சரி, "அரையாண்டுத்தேர்வு" என்ற ஒன்றை வைத்து எத்தனைநாள்தான் அரசியல்வாதிகளும் கல்வியாளர்களும் பேசிக்கொண்டிருப்பார்கள்?

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.