ஜாக்டோ அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடக்கிறது.
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் முறையை கொண்டு வர வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
சென்னையில் ஜாக்டோ அமைப்பை சேர்ந்த உயர் மட்ட குழு உறுப்பினர் சங்கர பெருமாள், சென்னை மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், லிங்கேசன் ஆகியோர் தலைமையில் 300–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு திரண்டனர்.
அவர்கள் கோட்டையை நோக்கி புறப்பட முயன்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து மறித்து அவர்களை கைது செய்தனர். அங்குள்ள மைதானத்திற்கு ஆசிரியர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
கைதான சங்கர பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஜாக்டோவின் மறியல் போராட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தியும் அரசு செவி சாய்க்க வில்லை.
தொடர் மறியல் போராட்டத்திற்கு பிறகும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் இறுதிகட்டமாக கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டமும் நடத்தப்படும் என்றார்.
ஆசிரியர்கள் போராட்டம் திங்கட்கிழமை வரை நீடிப்பதால் பள்ளிகளை முழுமையாக செயல்படுத்த கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து பள்ளிகளையும் திறந்து செயல்படுத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு கல்வி அதிகாரிகள் பாதுகாப்பு கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர்.
பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், பள்ளிகளை மூடாமல் திறந்து வைக்கவும் கல்வித்துறை இயக்குனர்கள் கண்ணப்பன், இளங்கோவன் ஆகியோர் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் ஆசிரியர்கள் இல்லாமல் எக்காரணத்தை கொண்டும் பள்ளிகளை மூடக்கூடாது, சத்துணவு அமைப்பாளர்களை கொண்டு வகுப்புகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை போல் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர் தாஸ், எத்திராஜலு உள்பட 1000–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்ட குழு சார்பில் மறியலுக்காக இன்று (சனிக்கிழமை) காலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திரண்டனர்.
பின்னர் ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை தொடர்ந்து போலீசார் தடுத்து நிறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய–ஆசிரியர்களை கைது செய்தனர்.
திருச்சி மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் திருச்சியில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இன்று திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்தனர். மொத்தம் 700 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.