பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தைத் தெரிவிக்கும்படி மாணவர்களை நிர்பந்தம் செய்யக்கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, ஜூன் 15-க்குள் அரசின் கருத்தை தெரிவிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜி.பாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் பல்வேறு மதம், சாதிய அமைப்புகள்
உள்ளன. இதன் தாக்கத்தால், நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம், சகோதரத்துவம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய கொள்கையின் அடிப்படையில் சாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
தமிழகம் சமூக நீதி, ஒற்றுமையை நிலைநாட்டும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. கடந்த 1973-ஆம் ஆண்டு, ஜூலை 2-ஆம் தேதி தமிழக கல்வித் துறை ஒரு அரசாணையை பிறப்பித்தது.
இதில், ‘தனது சாதி, மதம் போன்ற விவரங்களை பள்ளிச் சான்றிதழில், பள்ளி மாற்றுச் சான்றிதழில் ஆகியவற்றில் குறிப்பிட விரும்பவில்லை எனில், அதை கல்வி நிறுவனங்கள், பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்’ என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. முக்கியத்துவம் பெற்ற இந்த அரசாணையை பற்றி, பொது மக்கள் மத்தியில் விளம்பரம் செய்யவில்லை. ஆகையால், பெரும்பாலான மக்களுக்கு அரசாணை குறித்து தெரியவில்லை.
இந்த நிலையில், 1973-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை வலியுறுத்தி, மீண்டும் 2000-ஆம் ஆண்டு ஜூலை 31- இல் மற்றும் ஒரு அரசாணையை தமிழக கல்வித் துறை வெளியிட்டது. இது குறித்தும், பெரியளவில் மக்களிடம் முன்னெடுத்து செல்லவில்லை.
ஆகையால், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழில்(டி.சி.யில்) கண்டிப்பாக சாதி, மதத்தை குறிப்பிட வேண்டும் என்று மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நிர்பந்தம் செய்கின்றனர்.
சாதி, மதம் போன்றவற்றை கைவிட வேண்டும் என்று நினைக்கும் மக்கள் விரக்திக்கு ஆளாகின்றனர்.
பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தைத் தெரிவிக்க மாணவர்களை நிர்பந்தம் செய்யக்கூடாது என்று, கடந்த 5-ஆம் தேதி உயர் கல்வித்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனிப்பினேன். இதற்கு, இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை.
இட ஒதுக்கீடு சலுகைகளை பெற விரும்பும் நபர்களை தவிர, பிற மாணவர்களை பள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதி, மத விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்த கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் சத்திய சந்திரன் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, மனுவுக்கு தமிழக அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்கும்படி அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூன் 15-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.