Tuesday, May 31, 2016
தனியார் வாகனங்கள் ஆய்வு செய்வது... அவசியம் 'ஓவர்லோடு' தவிர்க்க நடவடிக்கை தேவை.
மாணவர்கள் பயணிக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதைத் தவிர்க்க பள்ளி வாகனங்களைப் போன்று தனியார் வாகனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கியுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாணவர்கள் பயணிக்கும் வாகனங்கள் விபத்துக்களில் சிக்கி மாணவர்கள் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசின் உத்தரவின்படி கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு கல்வி ஆண்டு துவக்கத்திலும் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் குழுவினர் முழு ஆய்வு செய்து தரச் சான்று அளித்து வருகின்றனர்.
இந்த வாகனங்களில் மொத்த மாணவர்களில் 5 சதவீதத்தினர் கூட பயணிப்பதில்லை. 50 சதவீத மாணவர்கள் தனியார் வேன், கார் மற்றும் ஆட்டோக்களிலும், 14 முதல் 20 சதவீத மாணவர்கள் அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ் மூலம் அரசு பஸ்களிலும், பிற மாணவர்கள் பெற்றோர் மற்றும் அவர்களாகவே சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
அதன்படி கடலுார் மாவட்டத்தில் 259 நர்சரி, 1,424 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 129 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், 281 அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், 14 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் என மொத்தம் 2,106 பள்ளிகளில் 4 லட்சத்து 63 ஆயிரத்து 917 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
இவர்களில் 62 ஆயிரம் மாணவர்கள் அரசின் இலவச பஸ் பாஸ் பெற்று அரசு பஸ்களிலும் இலவசமாகவும், 17 ஆயிரம் மாணவர்கள் அரசின் இலவச சைக்கிள் மூலம் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இது மாவட்டத்தின் மொத்த மாணவர்களில் 17 சதவீதமாகும். தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 774 வாகனங்களில் சுமார் 10,000 மாணவர்கள் மட்டுமே வந்து செல்கின்றனர். இந்த வாகனங்களை மட்டும் மாவட்ட நிர்வாகம் கடந்த 25ம் தேதி ஆய்வு செய்துள்ளது.
மாவட்டத்தில் பெரும்பான்மையான மாணவர்கள் பயணிக்கும் தனியார் வேன், கார் மற்றும் ஆட்டோக்களே அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. ஆதலால் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அளவுக்கு அதிகமான மாணவர்கள் ஏற்றிச் செல்வதையும் தடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் 13 சதவீத மாணவர்கள் இலவச பஸ் பாஸ் மூலம் அரசு பஸ்களில் செல்கின்றனர். ஆனால், அரசு பஸ்கள் பள்ளி நேரங்களில் குறிப்பிட்ட நிறுத்தங்களில் நிறுத்துவதில்லை. இதனால், மாணவர்கள் பஸ்களை விரட்டிச் சென்று ஏற வேண்டியுள்ளது.
மேலும், குறிப்பிட்ட வழித்தடங்களில் ஒருசில பஸ்கள் மட்டுமே இயங்குவதால் அளவுக்கு அதிகமாக மாணவர்கள் பஸ்களில் தொங்கிக் கொண்டு ஆபத்தான நிலையில் பயணிக்க வேண்டியுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக அரசு பஸ்கள் சமீப காலமாக உரிய பராமரிப்பின்றி நடு வழியில் பழுதாகி நிற்பதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்துச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.