புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 800 பிளஸ் 1 இடங்கள் காலியாக உள்ளன. பொதுத் தேர்வில் தொடர்ந்து தேர்ச்சி சதவீதம் குறைந்த, அரியூர்
அரசு மேல்நிலைப் பள்ளி யில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த சேர்க்கை புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் 43 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை, அந்தந்த பள்ளிகளில் கடந்த மாதம் 20ம் தேதியுடன் முடிந்தது. அரசு பள்ளிகளில் விண்ணப்பித்து மற்றும் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கான, ஒருங்கிணைந்த சேர்க்கை கலந்தாய்வு, கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில், ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. 8௦௦ இடங்கள் காலி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1100 பிளஸ் 1 இடங்களில், 2 நாட்கள் நடந்த ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், 290 இடங்கள் மட்டுமே நிரம்பின. 800 இடங்கள் காலியாகவே உள்ளன. சேர்க்கை ரத்து பிளஸ் 2 பொதுத் தேர்வில், அரசு பள்ளிகளில் அரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி கடைசி இடத்தை பெற்றது. கடந்தாண்டு இப்பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வு எழுதிய 33 மாணவர்களில் 3 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். கடந்த 2014-15 ஆண்டு பொதுத் தேர்விலும் இப்பள்ளி தேர்ச்சி சதவீதம் குறைந்து இருந்தது. தொடர்ச்சியாக தேர்ச்சி சதவீதம் குறைந்த அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், இந்தாண்டு பிளஸ் 1 மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.எஸ்.எஸ்.எல்.சி., தனித்தேர்வு எழுதியவர்கள் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓரிரு நாட்களில் முடிவு வெளியிடப்படும் என்பதால், வரும் வாரங்களில் மீண் டும் பிளஸ் 1 சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பாரதிதாசன் பள்ளிக்கு 'மவுசு' பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் சேர நகர பகுதி பள்ளிக்கு படையெடுப்பர். இதற்கு நேர்மாறாக, நகரப்பகுதியில் இருந்து 30 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள பி.எஸ்.பாளையம் பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில் சேர இந்தாண்டு அதிக மாணவர்கள் விண்ணப்பித்ததால், கூடுதலாக 2 பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இப்பள்ளியில், ஏ 1 (இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்) பிரிவு, ஏ 2 (இயற் பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்), ஏ3 (பொருளாதாரம், வணிகவியல், கணக்கு பதிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ்) ஆகிய 3 பிரிவுகள் இருந்தன. இந்தாண்டு, 300க்கும் அதிகமான மாணவர்கள் இப்பள்ளியில் சேர விண்ணப்பித்துள்ள னர். மாணவர்களின் விருப்பம் காரணமாக, இந்தாண்டு ஏ1 ஆங்கில வழி (இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்) பிரிவு, தமிழ் வழி ஏ3 பாடப் பிரிவும் கூடுதலாக உருவாக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.கடந்த ஆண்டு 150 ஆக இருந்த மாணவர் சேர்க்கை இந்தாண்டு 210 ஆக உயர்ந்துள்ளது. துணை முதல்வருக்கு 'சபாஷ்' பாவேந்தர் பாரதிதாசன் பள்ளியின் துணை முதல்வர் ராமையன், கடந்த 3 ஆண்டுகளாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, வீட்டில் மாணவர்கள் படிப்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது மற்றும் மாணவர்களின் பெற்றோரை சந்தித்து ஆலோசனை வழங்கி வருகிறார். இதனால், இப்பள்ளி கடந்த 3 ஆண்டுகளாக பொதுத் தேர்வுகளில், நல்ல தேர்ச்சி சதவீதத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.