Saturday, October 29, 2016
அரசுப் பள்ளி ஆங்கிலத்தில் கில்லி!
கல்லுாரிக்குள்ளே காலடி வைக்கும் நாள்; அறிமுகப்படலம், ஒவ்வொரு மாணவனின் ஆங்கில உச்சரிப்பும், அவனது பள்ளியின் முகவரியைச் சொல்கிறது. அரசுப் பள்ளி, மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ., என தாங்கள் படித்த பள்ளியின் பெயரைச் சொல்லும்போதே, குரலில் பொங்குகிறது பெருமிதம். ஆங்கிலம், ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருப்பது எப்போது மாறும் என்ற கவலையை உடைத்து எறிகிறது, இந்த அரசுப்பள்ளி.
ராஜவீதி துணி வணிகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியே, இப்பெருமைக்குரிய கல்விக்கூடம். மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவியர் படிக்கும் அரசுப்பள்ளி. இங்கு தான் துவக்கப்பட்டுள்ளது, 'விருட்சுவல் கிளாஸ் ரூம்' திட்டம். மற்ற மாவட்ட பள்ளிகளோடு, மாணவிகள் பேசவும், கலந்துரையாடவும் உதவும், 'ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ்' அறை இது.
நாம் சென்றபோது, ஏழாம் வகுப்பு மாணவியர், சென்னை, விருதுநகர், திருச்சி மாவட்ட மாணவர்களோடு, 'வீடியோ கான்பிரன்ஸ்' முறையில் பேசிக் கொண்டிருந்தனர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு, ராஜவீதி துணிவணிகர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராஜேஷ்குமார் விளக்கமளித்து கொண்டிருந்தார். நுனி நாக்கு ஆங்கில உச்சரிப்பில், கேள்விக் கணைகளால், ஆசிரியரை திணறடித்து கொண்டிருந்தனர் மாணவிகள்.
அரசுப்பள்ளியில் தான் வகுப்பு நடக்கிறதா என்ற சந்தேகத்தோடு, 'விருட்சுவல் கிளாஸ் ரூம்' செயல்பாட்டை கவனிக்க ஆரம்பித்தோம். வகுப்பு முடிந்ததும், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார், 'ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' பற்றி ஆர்வமாக விவரித்தார்.
''இந்த திட்டம், போன வருஷம் அறிமுகப்படுத்துனது. அப்போது 'ஸ்கைப்'பில் மட்டுமே பேச முடிந்தது. இதனால், தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இது, ஒருவர், மற்றொருவருடன் மட்டுமே பேச முடியும். ஆனால், தற்போது மென்பொருள், புதிதாக மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், நேரடியாக, ஒரே நேரத்தில், பலருடன் தொடர்பு கொள்ள முடியும்.
''மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி மூலம், வகுப்பு நடக்கும் நேரம், பாடத்தலைப்புகள் குறித்து, முன்கூட்டியே அறிவிப்பதால், மாணவிகள் பங்கேற்க வசதியாக உள்ளது. அறிவியல் பாடத்தில், உடலின் செயல்பாடுகள், தாவரங்களின் அமைப்பு உள்ளிட்ட பாடப்பகுதிகளுக்கு, 'அனிமேஷன் வீடியோ' கொண்டு விளக்குவதால், எளிதில் புரிவதாக, மாணவிகள் தெரிவிக்கின்றனர். ஆய்வகத்திற்கு சென்று, பிரத்யேகமாக செய்முறை வகுப்பு எடுக்க தேவையில்லை. மற்ற மாவட்ட மாணவர்களின் எண்ண ஓட்டத்தை அறிவதால், தங்களின் கற்றல் திறனை மேம்படுத்தி கொள்ள, ஆர்வம் காட்டுகின்றனர்,'' என்றார்.
ஆங்கிலமும், தொழில்நுட்பமும் துள்ளி விளையாடும் அரசுப் பள்ளி, 'ஏழைகளுக்கு எட்டாக்கனி இங்கிலீஷ்' என்ற கூற்றுக்கான முற்றுப்புள்ளி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.