WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 18, 2016

புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு: தமிழக கட்சிகள் உள்பட 75 அமைப்புகள் தில்லியில் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசு உத்தேசித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தில்லி நாடாளுமன்றச் சாலையில் "மக்களுக்கு எதிரான கல்விக் கொள்கை கூட்டு நடவடிக்கை குழு' சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்குழுவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கியர் சிறுபான்மை அமைப்புகள், தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் உள்பட மொத்தம் 75 அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோருக்கு ஆதரவாக மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி கலந்து கொண்டு பேசியதாவது: மத மாச்சரியங்களைக் கடந்து நாட்டில் சகோதரத்துவத்துடன் வாழும் சமூகத்தை ஒற்றுமையாக இருக்க விடக் கூடாது என்ற எண்ணத்துடன் கல்வியில் தனது சித்தாந்தங்களை புகுத்த வேண்டும் என்ற நோக்குடன் மத்தியில் ஆளும் பாஜக அரசு புதிய கல்விக் கொள்கையை உத்தேசித்துள்ளது. தந்தை பெரியார் நமது மண்ணில் விதைத்துள்ள விதைகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன. அந்தப் பெரியாரின் கொள்கைகளுக்கு எதிராக புதிய கல்விக் கொள்கை உள்ளது. சுயமரியாதை இயக்கத்தின் வழியாக சமூக நீதி பெற்றோம். சாதிய பாகுபாடுகளை ஒடுக்கினோம். அனைத்து மாணவர்களும் கல்வி கற்க உரிமை உள்ளது என்பதை நிலைநாட்டினோம். மறுக்கப்பட்ட சமூக மக்கள் தற்போது கல்வி கற்று நல்ல பதவியில் உள்ளனர். இவற்றையெல்லாம் அழித்துவிடக் கூடிய ஒன்றாக புதிய அரசு உத்தேசித்துள்ள புதிய கல்விக் கொள்கை உள்ளது. பின்லாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுமுறை இல்லை. ஆனால், இந்தியாவில் மாணவர்களுக்கு கட்டாயத் தேர்வு முறையை புதிய கல்விக் கொள்கை பரிந்துரைத்துள்ளது. குலக் கல்வி கொண்டு வந்த முதல்வரையே (ராஜாஜி) மாற்றிய பெருமை தமிழகத்துக்கு உண்டு. புதிய கல்விக் கொள்கையும் மற்றொரு வகையில் குலக் கல்வித் திட்டமாகவும், வர்ணாசிரம முறையைக் காக்கும் வகையிலும் உள்ளது. நமது இந்தியாவின் பன்முக கலாசார, பாரம்ரிய அடையாளங்களை அழித்துவிட்டு, ஒரு மொழி, ஒரு மதம் என்ற மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் கொள்கைகளை புகுத்துவதாக புதிய கல்விக் கொள்கை உள்ளது என்றார் கனிமொழி. இதைத் தொடர்ந்து, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் பேசுகையில், "புதிய கல்விக் கொள்கையில் மதத்தைத் திணிப்பதை அதிமுக அரசு எதிர்க்கிறது. குறிப்பாக இரு மொழிக் கொள்கை கொண்ட தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை வாயிலாக சம்ஸ்கிருதத்தை மொழிப் படமாக திணிப்பதையும் ஏற்கவில்லை. மதத்தை யோகா, கல்வி ஆகிய வடிவங்களில் புகுத்துவதை ஏற்க முடியாது. தாய் மொழி வாயிலாகவே கல்வி கற்பிக்கப்படுவதால், கல்வியை மீண்டும் முழுமையாக மாநில பட்டியலிலேயே மத்திய அரசு சேர்க்க வேண்டும்' என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், பேராசிரியர் நந்திதா நாராயண், சமூக ஆர்வலர்கள் மது பிரசாத், சப்ஷனம் ஆஸ்மி, அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தின் தலைவர் திருமலை, தமிழகத்தைச் சேர்ந்த "மே 17' இயக்கத்தின் திருமுருகன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மா.லெ) மீ.தா. பாண்டியன், திருநெல்வேலியைச் சேர்ந்த பாதிரியார்கள் அந்தோனி குரூஸ், ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.