Saturday, November 12, 2016
புதிய பாடத் திட்டம்: அடுத்த கல்வியாண்டிலும் வர வாய்ப்பில்லை: அமைச்சர் பாண்டியராஜன்.
பள்ளிக் கல்விக்கான புதிய பாடத் திட்டம் அடுத்த கல்வியாண்டிலும் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
மேலும், அனைத்து வகுப்புகளுக்கும் புதியப் பாடத் திட்டம் கொண்டுவரும் எண்ணம் அரசுக்கு இல்லை. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே புதிய பாடத் திட்டம் கொண்டுவரப்படும். அதிலும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் அவர் கூறினார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை -தென்கொரிய அரசு கல்வி அகாதெமி இணைந்து ஒரு நாள் கருத்தரங்கை சென்னையில் வியாழக்கிழமை நடத்தின. இதில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:
வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்விக்கு புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை. ஏனெனில், தற்போதைய பாடத் திட்டத்தின் அடிப்படையில் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி இப்போதுதான் தொடங்கப்பட உள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே புதியப் பாடத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. அதிலும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. இருந்தபோதும் முன்பைவிட சிறப்பானதாக இருக்கும். முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன், புதிய பாடத் திட்ட அறிவிப்பு வெளியிடப்படும்.
முன்னதாக கருத்தரங்கு தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:
தமிழகத்தை அறிவுத் தலைநகரமாக மாற்றும் தமிழக அரசின் திட்டத்தின் அடிப்படையில். தமிழக பள்ளி கல்வித் துறை, தென்கொரியாவைச் சேர்ந்த அரசு கல்வி அகாதெமியுடன் இணைந்து திட்டம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது.
அதன்படி, தமிழகத்தின் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இடைநிற்றலைக் குறைத்தல், கற்றலை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கற்பிக்கும் முறை என பல்வேறு சிறப்புத் திட்டங்களை கொரிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து அறிந்துகொள்ள உள்ளனர்.
அதேபோல், தென்கொரிய கல்வி முறை, மேற்கொள்ளப்பட்டிருக்கும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களை அந்த நாட்டு கல்வியாளர்கள் பகிர்ந்துகொள்ள உள்ளனர். இதன் மூலம் பல திட்டங்களை வகுக்க முடிவு செய்துள்ளோம். நமது கல்வி முறையை இன்னும் எப்படி மேம்படுத்த முடியும் என்பது குறித்தும் இதன் மூலம் ஆராயப்படும் என்றார் அமைச்சர் பாண்டியராஜன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.