தமிழகஅரசு கல்வித்துறை நடத்தும் பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில், விடைகளை எழுதிய பிறகு அனைத்து விடைகளையும் அடித்துவிட்டு விடைத்தாள் கொடுக்கும் மாணவ, மாணவியர்கள் அடுத்த இரு தேர்வுகளை எழுத முடியாது என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
பிளஸ்டூ மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. மார்ச் 2-ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி 31-ம்தேதி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்புக்கான தேர்வு மார்ச்-8ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுத்தேர்வை குளறுபடிகள் இல்லாமல் நடத்துவது குறித்து அனைத்துமாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளையும் தேர்வுத்துறை வழங்கியுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் கடைபிடிக்க வேண்டியவை குறித்தும், தேர்வு மையங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சில தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை காட்டவேண்டும் என்ற நோக்கில் சில முறைகேடுகளில் ஈடுபடுவதாக தேர்வுத்துறைக்கு பல புகார்கள் வந்துள்ளன. தனியார் பள்ளிகள் 100 சதவீதம் காட்டினால்தான், அடுத்த ஆண்டு அதிக அளவில் அந்த பள்ளியில் சேர வருவார்கள் என்ற வணிக நோக்கில் செயல்படுகின்றன. அதற்காக, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல ஆலோசனைகளை தனியார் பள்ளிகள் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி படிப்புக்கு உரிய பாடத் தேர்வில் இடம்பெறும் கேள்விகள் குழப்பமாக இருந்தாலோ, மாணவர்களால் விடையளிக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ அந்தமாணவர்கள் குறிப்பிட்ட அந்த தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுவிடுவார்கள். அதனால், மதிப்பெண்கள் குறையும் என்று தெரிந்தால், விடைகளை அடித்துவிட்டு விடைத்தாளை கொடுத்துவிட்டு வந்துவிட வேண்டும் என்றும், பின்னர் நடக்கும் உடனடித் தேர்வை எழுதலாம் என்றும் ஆலோசனை கூறி வருவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, எந்த ஒரு மாணவரும் தேர்வு எழுதிய பிறகு விடைத்தாளின் அனைத்து பக்கங்களையும் பேனாவால் அடித்து விட்டு கொடுத்தால், அப்படிப்பட்ட மாணவர்கள் குறித்து விவரங்களை அறைக் கண்காணிப்பாளர், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் உடனடியாக தேர்வுத் துறை இயக்குநருக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் அடுத்தடுத்து நடக்கும் 2 தேர்வுகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.