ஜல்லிக்கட்டு விவகாரத்தில், ஒரே நாளில் அவசர சட்டம் கொண்டு வந்து சாதித்த, முதல்வர் பன்னீர்செல்வம், மீண்டும் ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில், புதிய சட்ட மசோதா, சட்டசபையில், நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே உள்ளது போல, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர, இதன் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, தமிழ்நாடு தொழில் கல்வி நிறுவனங்கள் சட்டப்படி, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடந்து வருகிறது. மத்திய அரசு, 'நீட்' என்ற நுழைவுத் தேர்வின்படி, மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையில், இந்திய மருத்துவ மன்ற சட்டம்; பல் மருத்துவர்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்தது.
தமிழகத்தில், 'நீட்' தேர்வு எழுதும் அளவுக்கு, கிராமப்பகுதி மாணவர்கள் தயாராகும் வகையில், போதிய பயிற்சி மையங்கள் இல்லை. பொருளாதார நிலையிலும், அவர்கள் பின்தங்கி உள்ளனர். மேலும், 'நீட்' தேர்வுக்கான பாடமுறை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டப்படி உள்ளது.இதனால், 'நீட்' தேர்வு, தமிழக மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என, மாநிலம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஆண்டு, மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களை மட்டும், மார்க் அடிப்படையில் சேர்க்க, நீதிமன்ற அனுமதி பெறப்பட்டது. இந்தாண்டு எல்லா ஒதுக்கீட்டுக்கும், 'நீட்' கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., சேர்க்கைக்கு, தற்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும் என்ற கொள்கை முடிவை, முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான,
தமிழக அரசு அதிரடியாக எடுத்துள்ளது. இதன்படி, 'நீட்' தேர்வை தவிர்த்து, பழைய நடைமுறையில் மாணவர் சேர்க்கையை நடத்த வசதியாக, '2017ம் ஆண்டு, தமிழ்நாடு மருத்துவ அறிவியல் இளநிலை மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப்புகள் சேர்க்கைக்கான சட்டம்' என்ற புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அதை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
மசோதா சொல்வது என்ன?
* அகில இந்தியஒதுக்கீட்டு இடங்கள் தவிர, அரசு கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் உள்ள, அனைத்து இடங்களுக்கும், இந்த சட்டம் பொருந்தும்
* சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில், 65; சிறுபான்மை கல்வி நிறுவனங்களில், 50 சதவீத இடங்களுக்கும் பொருந்தும்.
முதுநிலை படிப்பு
முதுநிலை மருத்துவம், முதுநிலை பல் மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கு, பழைய நடைமுறையை தொடர்வதற்கான மசோதாவும், நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.அதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான, 50 சதவீத இடங்களை தவிர்த்து, நுழைவுத் தேர்வு மற்றும் மருத்துவப் பணி அனுபவ அடிப்படையில், மீதியுள்ள இடங்களில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ முதுநிலை படிப்புக்கு, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.'நீட்' தேர்வு நடத்தப்பட்டால், மாநில அரசால் தற்போது பின்பற்றப்படும், சேர்க்கை முறை மாறக்கூடியதாக இருக்கும். எனவே, தற்போதுள்ள நடைமுறையே தொடர, இந்த மசோதா வகை செய்கிறது. மருத்துவ கல்வி தொடர்பாக, நேற்று தாக்கல் செய்யப்பட்ட, இரு முக்கிய மசோதாக்களும், இன்று நிறைவேறும் என, எதிர்பார்க் கப்படுகிறது.
மே 7ல் 'நீட்' தேர்வு
'அகில இந்திய அளவிலான, 'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வு, மே, 7ல் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ.,யின், 'நீட்' தேர்வு கமிட்டி துணை செயலர் வெளியிட்ட அறிவிப்பு:எம்.பி.பி.எஸ்., -பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, மே, 7ல், நாடு முழுவதும் நடத்தப்படும். இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. மார்ச், 1, நள்ளிரவு, 12:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், விபரங்களை, http:/cbseneet.nic.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.'நீட்' தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க, நேற்று சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 'நீட்' தேர்வுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஜனாதிபதி ஒப்புதல் அவசியம்'
'நீட்' தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள, புதிய சட்டம் குறித்து, மூத்த வழக்கறிஞரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான, பி.வில்சன் கூறியதாவது:
'நீட்' தேர்வில் இருந்து மாநில அரசுகள் விதிவிலக்கு பெறும் வகையில், 2016ல், ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஒரு ஆண்டுக்கு மட்டுமே விதி விலக்கு அளிக்கப்பட்டதால், தமிழக அரசு, தற்போது புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இதற்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இல்லையென்றால், சட்டம் செல்லாததாகி விடும். ஏனென்றால், மருத்துவ கவுன்சில் சட்ட திருத்தத்தை மீறியதாகி விடும்.
அ.தி.மு.க., ஆட்சியின் போது, 2006 பிப்ரவரியில், தொழில் கல்வியில் மாணவர்கள் சேர்க்கைக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. பின், தி.மு.க., ஆட்சி வந்ததும், தொழில் கல்வியில் மாணவர்கள் சேர்க்கைக்கான சட்டம் கொண்டு வரப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பான மேல்முறையீட்டையும், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டத்துக்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டதால், அந்த சட்டம் செல்லுபடியானது. அதேபோல், இப்போது தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டத்துக்கும், ஜனாதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.