எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையில் வரும் கல்வியாண்டில் நுழைவுத் தேர்வு இல்லாமல், பழைய நடைமுறையே தொடர சட்டத் திருத்த மசோதா பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை சுகாதாரம்-குடும்ப நலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:- மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
இப்போது இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை படிப்புக்கு அனைத்து மருத்துவக்கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் பல்மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே சீரான நுழைவுத்தேர்வை நடத்த மத்திய அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது.
தமிழகத்தில் ஒரே சீரான நுழைவுத்தேர்வை எழுதக் கூடிய மாணவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் இருக்கிறார்கள். இந்தத் தேர்வுக்காக அவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கான பயிற்சி மையங்கள் இல்லாமல் உள்ளது. எனவே அதற்கான வசதியை பெறமுடியாமல் இருக்கிறார்கள். கிராமப்புற மாணவர்கள் பொருளாதாரத்தில் போதுமான வசதியின்றி பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரே சீரான நுழைவுத்தேர்வு ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்துக்கு பிளஸ் 2 தேர்வில், சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டிய முக்கிய நிகழ்வாக உள்ளது.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஒரே சீரான நுழைவுத்தேர்வு மாணவர்களுக்கு ஒரு சுமையாக உள்ளது. உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி படிப்புக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை ஏற்பதென்பது அதிகப்படியான சுமையாகும். மேலும் பாடத்திட்டம், பாடமுறை மற்றும் ஒரே சீரான நுழைவுத்தேர்வு என்பது மத்திய பாட கல்வி முறையின் (சி.பி.எஸ்.இ.,) பிளஸ் 2 பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கிறது.
தமிழகமானது, மேல்நிலைக்கல்வி தேர்வு வாரியத்தின் பாடத் திட்டத்திலிருந்து வேறுபட்டிருக்கிறது. எனவே, மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்ளும் வகையில் அரசு மேல்நிலைக் கல்வியில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம், பல்மருத்துவ இளநிலைப் படிப்புக்கான சேர்க்கையில் இப்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்ற கொள்கை முடிவை அரசு மேற்கொண்டுள்ளது.
அதன்படி இந்த நோக்கத்திற்காக சட்டமொன்றைக் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது என்று அந்த சட்டத் திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று நிறைவேறும்: இந்த சட்டத் திருத்த மசோதாவானது, சட்டப் பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான புதன்கிழமை (பிப். 1) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த மசோதா எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.