தமிழகத்தைச் சேர்ந்த 25 அரசுப் பள்ளிகளுக்கு 'தூய்மைப் பள்ளி' விருதை தில்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வழங்கினார்.
தமிழக அரசின் 'விஷன் 2023'-இன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சுகாதாரமான சூழலை உருவாக்கி, 'முழு சுகாதார தமிழகம்' எனும் இலக்கை எட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிக் கழிவறைகளை கட்டுமானத்தோடு நிறுத்திவிடாமல் அவற்றை முறையாகப் பராமரிப்பதற்கு பணியாளர் மற்றும் பொருள் செலவை அரசே ஏற்று செயல்படுத்தி வருவதாக தமிழக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் 'தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி' எனும் திட்டத்தின் கீழ், 'தூய்மைப் பள்ளி விருது'க்காக மாவட்ட, மாநில அளவில் பள்ளிகளைத் தேர்வு செய்யும் பணியை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டது. இதில் 35 மாநில, யூனியன் பிரதேச அரசுகளால் 643 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில் தேசிய விருதுக்கு 172 பள்ளிகள் தேர்வாகின. மேலும், அதிக அளவில் தூய்மைப் பள்ளிகளைக் கொண்ட முதல் மூன்று மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பெற்றது.
இந்நிலையில், தேசிய அளவிலான 'தூய்மைப் பள்ளி விருது 2017- 18' வழங்கும் விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் இந்த விருதை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தமிழகத்துக்கு வழங்கினார். அதை தமிழக அரசு சார்பில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பெற்றுக் கொண்டார். மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 அரசுப் பள்ளிகளுக்கு தூய்மைப் பள்ளி விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் தலா ஒரு மாணவர் அல்லது மாணவி பெற்றுக் கொண்டனர்.
விழாவில் ஜாவடேகர் பேசுகையில், 'தூய்மைப் பள்ளி விருதுக்கான போட்டி அடுத்த ஆண்டு தனியார் பள்ளிகளுக்கும் கூட நடத்தப்படும். இந்தப் போட்டியில் நிகழாண்டு 2, 68,402 மத்திய, மாநில அரசுப் பள்ளிகள் தன்னார்வத்துடன் பங்கேற்றன. இதுவே புதிய இந்தியாவின் தொடக்கமாக உள்ளது. மேலும், மாணவர்கள் தூய்மைத் தூதுவர்களாக உள்ளனர். இவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மை இந்தியா' எனும் தொலைநோக்குப் பார்வைத் திட்டத் தை முன்னெடுத்துச் செல்வார்கள்' என்றார்.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின்முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
இந்த விருது குறித்து அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையின் கீழ் செயல்படும் அரசின் பள்ளிக் கல்வித் துறையானது பல்வேறு நிலைகளில் தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்வதற்கான பணிகளை ஆற்றி வருகிறது. அதனடிப்படையில் மத்திய அரசின் விருதைப் பெறும் வகையில் தமிழகம் செயல்பட்டு வருகிறது. அதேவேளையில், பள்ளிகளில் அனைத்து கட்டமைப்பு வசதி, கழிப்பிடம், குடிநீர் வசதி அளிப்பதிலும் தமிழகம் சிறப்பான முறையில் உள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை வியாழக்கிழமை சந்தித்தேன். அப்போது, மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்துக்கு (ஆர்எம்எஸ்ஏ) நிதி வழங்குமாறு கடிதம் கொடுத்தேன். இதையடுத்து, உடனடியாக நிதியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக அவருக்கு தமிழக முதல்வர் நன்றிக் கடிதமும் எழுதியுள்ளார். ஆகவே, தமிழக அரசு கேட்ட உடனேயே நிதியைத் தரும் அளவுக்கு தமிழகம் கல்வித் துறையில் சிறப்பான முறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறது என்றார் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.