WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 21, 2017

பாலிடெக்னிக் தேர்வு தில்லுமுல்லு : போட்டி தேர்வு எழுத 200 பேருக்கு தடை.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர் பணிக்கு, செப்டம்பரில் நடந்த தேர்வில், 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், நவ., 7ல் வெளியிடப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களில், இன்ஜினியரிங் அல்லாத பாடப் பிரிவினருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பல தேர்வர்களுக்கு, விடைத்தாளில் உள்ளதை விட, அதிக மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதாக, சில தேர்வர்கள் ஆதாரத்துடன், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு புகார் அனுப்பினர். உயர் கல்வித் துறை, பள்ளிக்கல்வித் துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் ஆகியவற்றுக்கும், புகார்கள் சென்றன. இதன்படி, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவுப்படி, டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன், உறுப்பினர் செயலர், உமா மற்றும் அதிகாரிகள், ரகசிய விசாரணை நடத்தினர். இதில், பல தேர்வர்களுக்கு, அதிக மதிப்பெண் வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஏற்கனவே வெளியான தேர்வு முடிவுகள், அதிரடியாக ரத்து செய்யப்பட்டன. பின், 1.33 லட்சம் தேர்வர்களின் விடைத்தாள் நகல்களும், விடைக்குறிப்பும், இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. தேர்வர்களே, தங்கள் மதிப்பெண்ணை உறுதி செய்து கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. மதிப்பெண் மாறியிருந்தால், டி.ஆர்.பி.,க்கு தேர்வர்கள் கடிதம் அனுப்ப, டிச., 18 வரை அவகாசம் தரப்பட்டது. அதன்படி, இதுவரை, 120 பேர் கடிதம் அனுப்பி உள்ளனர். அவர்களில், 10 பேர் மட்டும், தேர்வு முடிவில் வந்த மதிப்பெண்ணை விட, விடைத்தாளில் குறைந்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதே நேரம், விடைத்தாளை விட, தேர்வு முடிவில் அதிக மதிப்பெண் கிடைத்த, ௨௦௦ பேர், தங்களுக்கான மதிப்பெண் மாற்றம் குறித்து, டி.ஆர்.பி.,க்கு கடிதம் அனுப்பவில்லை. அவர்கள், ஏஜன்டுகள் வாயிலாக பணம் கொடுத்து, அதிக மதிப்பெண் பெற்றிருப்பதை, டி.ஆர்.பி., உறுதி செய்து உள்ளது. அவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கும்படி, டி.ஆர்.பி., சார்பில், தேர்வர்களின் முகவரி விபரங்களுடன், சென்னை போலீஸ் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், தேர்வில் பங்கேற்று, தவறான பாதையில் அதிக மதிப்பெண் பெற்ற, 200 பேர், அரசு வேலைக்கான போட்டி தேர்வுகள் எழுதவும், டி.ஆர்.பி., தடை விதித்து உள்ளது. இது குறித்த கடிதங்கள், சம்பந்தப்பட்ட தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட உள்ளன. தேர்வு பணியில் யார், யார்? டி.ஆர்.பி.,யில் தேர்வு அறிவிப்பு வெளியானது முதல், தேர்வு முடிவுகள் வெளியானது வரையிலான பணிகளில் ஈடுபட்ட, உயரதிகாரிகள் முதல், உதவியாளர்கள் வரையிலானோரின் பெயர், விபரங்கள், போலீசிடம் தரப்பட்டுள்ளன.மேலும், 'ஆன் லைன்' மதிப்பீட்டை மேற்கொண்ட, டில்லியைச் சேர்ந்த, 'டிஜிட்டல்' நிறுவனம், விண்ணப்பதாரர்களுக்கு, 'ஹால்டிக்கெட்' வழங்கிய முறை என, அனைத்து நபர்களின் பெயர், துறை, நிறுவனம் குறித்த பட்டியலும் போலீசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.