அரசு பணியாளர்களுக்கான துறை தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் இனி நடக்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தற்போது நடைமுறையில் உள்ள அரசுப் பணியாளர்களுக்காக நடத்தப்பெறும் துறைத்தேர்வு முறை, மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம், முறையின்படி நடைபெற உள்ளது. இதுகுறித்தான அறிவிப்பு தேர்வாணையத்தால் செப்டம்பர் 23ம் தேதி ஏற்கனவே வெளியிடப்பட்டு தேர்வாணைய இணையதளத்தில் முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், வருகிற 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை (25ம் தேதி நீங்கலாக) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், புதுடெல்லி மையத்திலும் திருத்தியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் முறை அமைப்பின்படி துறைத்தேர்வுகள் நடைபெற உள்ளது. முற்றிலும் கொள்குறி வகை முறை 17 தேர்வுகள், முற்றிலும் விரிவாக விடை எழுதும் வகைமுறை 33 தேர்வுகள், பல்வேறு விகிதாச்சாரங்களில் கொள்குறி வகையுடன் இணைந்த விரிவாக விடை எழுதும் வகையில் நடத்தப்பட உள்ள பிற தேர்வுகள் 97 தேர்வுகள். மொத்தம் 147 தேர்வுகள். * திருத்தியமைக்கப்பட்ட புதிய முறையின்படி நடைபெற உள்ள கொள்குறி வகைத் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பதாரரின் பெயர், பதிவெண், துறைத்தேர்வின் பெயர், குறியீட்டு எண், தேர்வு மையத்தின் பெயர், தேர்வு நாள் ஆகிய சுய விவர குறிப்புகளை உள்ளடக்கிய தனிப்பட்ட முறையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஓ.எம்.ஆர். விடைத்தாள் முதன்முறையாக துறைத்தேர்வுகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன் மாதிரி ஓ.எம்.ஆர். விடைத்தாள் தேர்வாணைய இணையதளத்தில் விண்ணப்பதாரர்களின் பார்வைக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. * விரிவான விடை எழுதும் முறையைக் கொண்ட துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவெண் மற்றும் துறைத்தேர்வின் பெயர் ஆகியவற்றை விடைத்தாளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடியே எழுத வேண்டும். கொள்குறி வகையுடன் இணைந்த விரிவான விடைகள் எழுதும் முறையின்படி ஒருங்கே அமைக்கப்பெற்ற துறைத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பதாரர்கள் கொள்குறி தேர்வையும் விரிவான விடை எழுதும் முறையிலான தேர்வையும் கட்டாயமாக எழுத வேண்டும். மேலும் அவ்விரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் மட்டுமே விண்ணப்பதாரர் அத்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார். * நேரடி நியமனத்தின் மூலம் ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் உதவி இயக்குநர்களுக்கும், மற்றும் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கும் புதிதாக துறைத்தேர்வுகள் தேர்வாணையத்தால் முதன் முறையாக நடத்தபெற உள்ளது. * விண்ணப்பதாரர்கள் கொள்குறி வகை தேர்வுகள் அல்லது விரிவான விடை எழுதும் தேர்வுகள் அல்லது இவ்விரண்டும் அடங்கிய தேர்வுகளை எழுதும் பட்சத்தில் ஓ.எம்.ஆர். விடைத்தாள் மற்றும் விரிவான விடை எழுதும் விடைத்தாள்களை பெற்றவுடன் தங்களது பெயர், பதிவெண், புகைப்படம் அடங்கிய துறைத்தேர்வுகளுக்கான வருகைத்தாளில் தவறாது கையொப்பம் இடவேண்டும். * துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in தேர்வாணைய இணையதளத்தில் உள்ள துறைத்தேர்வுகள் எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள், கால அட்டவணை மற்றும் அனுமதிக்கப்பட்ட புத்தகங்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். * துறைத்தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.