'சம வேலைக்கு சம ஊதியம்' கேட்டு போராடும் இடைநிலை ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களை, நேற்று முன்தினம் கைது செய்து, இரவெல்லாம் போலீஸ் வாகனங்களில் அமரவைத்து அலைக்கழித்து, நேற்று மதியம் வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்தனர்.
'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வலியுறுத்தி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று 17வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கடும் கோபம்
அவர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும் என, தேர்தல் வாக்குறுதி அளித்த தி.மு.க., அரசு தற்போது மவுனம் காப்பது, ஆசிரியர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நேற்று முன்தினம் காலை, சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட, இடைநிலை ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர். மாலை வரை சமூகநலக்கூடத்தில் தங்க வைத்தனர்.
அதன்பின், கலைவாணர் அரங்கின் வெளியே போலீஸ் வாகனத்தில் அமர வைத்தனர். இரவு, 8:00 மணிக்கு மேல், தாம்பரம், கேளம்பாக்கம் என, சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று ஆங்காங்கே காத்திருந்தனர். நள்ளிரவுக்கு மேல், தென்மாவட்டங்களுக்கு அழைத்து சென்றனர்.
ஒப்படைப்பு
நேற்று மதியம், சங்கத்தின் தலைவர் ரெக்ஸ் ஆனந்தை, மதுரை கூடல்புதுார்; செயலர் ராபர்ட்டை மதுரை எஸ்.எஸ்.காலனி; பொருளாளர் கண்ணனை, புதுக்கோட்டை மாவட்டம் நாகமலை; துணை பொதுச்செயலர் வேல்முருகனை, தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி; தேனி மாவட்ட பொருளாளர் மாசானத்தை, போடி நாயக்கனுார்.
துணைத்தலைவர் ஞானசேகரனை, திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி; கொடைக்கானல் வட்டார தலைவர் ரெங்கசாமியை, மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்தனர்.
அவர்களை அந்த மாவட்ட போலீசார், அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். மேலும், அவர்கள் வெளியில் வராமல் இருக்க, ஒவ்வொருவர் வீட்டின் முன்னரும், இரண்டு போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில், அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.