பொது ‘டெட்’ தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் எப்போது வெளியிடும் என இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் பிஎட் பட்டதாரிகளும் காத்திருக்கிறார்கள்.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை போதிக்கும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் டெட் தேர்வை அரசு சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. கடைசியாக டெட் தேர்வு கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2026 வருடாந்திர தேர்வு கால அட்டவணையின்படி, இந்த ஆண்டு டெட் தேர்வுக்கு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டு ஜூலை மாதம் தேர்வை நடத்த வேண்டும். ஆனால், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வுக்கு மட்டுமே கடந்த பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தேர்வு உத்தேசமாக ஜூலை 4 மற்றும் 5-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்பட வேண்டிய பொது டெட் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடாமல் உள்ளது.
இது தொடர்பாக டெட் தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பிஎட் பட்டதாரிகள் கூறியதாவது: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுக்கு 2 முறை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்த விதிமுறையை டிஆர்பி ஒருபோதும் பின்பற்றுவதில்லை. 2 ஆண்டுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என்ற அளவில்தான் தமிழகத்தில் டெட் தேர்வு நடத்தப்படுகிறது.
அடுத்த டெட் தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியிடப்படும் என டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவது டெட் தேர்வுக்கான அறிவிப்பே ஜூன் மாதம் ஆகியும் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த டெட் தேர்வை எப்போது நடத்தப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. எனவே பொது டெட் தேர்வுக்கான அறிவிப்பை டிஆர்பி உடனடியாக வெளியிட்டு, விரைந்து தேர்வை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.