WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 22, 2026

தமிழக பள்ளிப் பாடத் திட்டத்தில் 'ஸ்டீம்'('STEAM) என்ற புதிய முறை அறிமுகம்.

 

“தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் புதிய முயற்சியாக, 'ஸ்டீம்' என்ற கல்வி முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. மாணவர்களின் புத்தகச் சுமையையும், மனச் சுமையையும் குறைக்கும் வகையிலான கல்வியே, பள்ளிகளில் இனிமேல் கற்று தரப்படும்,” என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

தமிழக பள்ளி கல்விக்கான கலைத்திட்டம், இலக்குகள், திறன்கள் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில், பாடத்திட்ட உயர்மட்ட வல்லுனர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்பு குழு கூட்டம், சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று நடந்தது.

இதில், அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:

குழந்தைகளுக்கான கல்வியாக தமிழகத்தில் கல்வி முறையை மாற்ற இருக்கிறோம். இனி குழந்தை மையக் கல்வியாக மாறுகிறது.

மனச்சுமை

அதில், கதைகளின் வழியே கணிதம் கற்று தரப்படும். புத்தகப்பை சுமை குறையும் அளவிற்கு, மாணவர்களின் மனச்சுமையும் குறையும். ஒவ்வொரு கணித வகுப்பும், கதை சொல்லல் முறையில் நடக்கப் போகிறது.

உலக நாடுகள், அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், கணிதம் போன்றவற்றை உள்ளடக்கிய, 'STEM - ஸ்டெம்' என்ற கல்வி முறையை பின்பற்றுகின்றன. நாம், 'ஸ்டெம்' முறையில் இருந்து, 'ஸ்டீம்' கல்வி முறையை நோக்கி நகர்கிறோம்.

இதில் கூடுதலாக, 'ஆர்ட்ஸ்' எனும் கலைப்பிரிவை சேர்த்துள்ளோம். அதாவது, அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், கலை மற்றும் கணிதம் பாடத்திட்டங்களை கொண்ட, 'STEAM - ஸ்டீம்' என்ற புதிய முறையை அறிமுகம் செய்கிறோம்.

கலை வாயிலாக மனிதம், பண்புகள் கற்று தரப்படும். கலையுடன் கூடிய விஞ்ஞான வகுப்புகள் நடத்தப்படும். எழுத்துகள் குறைந்து, வண்ணப்படங்கள் அதிகமாக்கப்படும். அதில், 'கியூ.ஆர்., கோடு' இருக்கும். அதை, 'ஸ்கேன்' செய்து பார்த்தால், அது வீடியோவாக மாறும். ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நுணுக்கங்கள் குறித்து, மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்படும்.

பெண்ணுரிமை, கருணை அறிவாற்றலை முன்னிலைப்படுத்தும் கல்வி மற்றும் பெற்றோரை மதிக்கும் கல்வி கற்று தரப்படும். ஏற்கனவே, மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இது போன்ற பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

தலையீடு இருக்காது

தற்போது, நான்காம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இந்த பாடத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பள்ளி மாணவர்களை அடித்து சொல்லிக் கொடுத்த காலம் போய்விட்டது. இனி ஆடிப் பாடி சொல்லிக் கொடுங்கள். மாணவர்களுக்கு 100 சதவீதம், 'மெரிட்' அடிப்படையில் மட்டும் தான் 'சீட்' வழங்கப்படும். தகுதி, திறமையை வைத்து மட்டும் தான் ஆசிரியர்கள் உள்ளே வர முடியும். இதில், அரசியல் தலையீடுக்கு இடமில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல்

“பள்ளி மாணவர்களுக்கு, விண்வெளி தொடர்பான அறிவியல் திறனை ஊக்குவிக்க திட்டமிட்டு உள்ளோம்,” என, 'இஸ்ரோ' எனும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் நிறைய அரசு பள்ளிகள் உள்ளன. ஆனால், பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. பள்ளி கல்வித்துறைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பும், விண்வெளி துறை சார்பில் வழங்கப்படும். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல், விளையாட்டு, ஆரோக்கியம் என, அனைத்து துறைகளிலும் திறமையாளர்களாக திகழ வேண்டும். மாணவர்களிடையே நல்ல பண்பாடு, ஒழுக்க முறைகளை மேம்படுத்துவது குறித்து, பாடத்திட்ட கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

மாணவர்களை முன்னேற்றுவதற்கு, நாம் செய்த சாதனைகளையும், நாட்டின் வளர்ச்சியையும், மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு, விண்வெளி தொடர்பான அறிவியல் திறனை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தித்தாள் வாசிக்க நேரம்

மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் நேரம் குறைந்து, மொபைல் பார்க்கும் நேரம் அதிகமாகிவிட்டது. செய்தித்தாள் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. மாணவர்கள் செய்தித்தாள் படிப்பது அவசியம். மாணவர்களிடம் செய்தித்தாள் வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். அதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் செய்தித்தாள் வாசிப்புக்கென நேரம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ராஜ்மோகன், பள்ளி கல்வித்துறை.

அணில் கதை கூறிய அமைச்சர்
கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:

வால் அறுந்த நிலையில், ஒரு அணில் சுற்றியதை பார்த்த சக நண்பர், இது அணில் போல இல்லை; எலி போல உள்ளது என்று கிண்டல் செய்தார். அதற்கு நான் சொன்னேன், அதன் உருவத்தை பார்த்து கிண்டல் செய்யாதே. அது தனக்கு ஏற்பட்ட ஆபத்தில் இருந்து மீண்டு வந்திருக்கலாம். குடும்பத்தை பிற விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற போராடி இருக்கலாம்.

அப்போது, அதன் வால் துண்டிக்கப்பட்டு இருக்கலாம். அதன் உருவத்தை பார்க்காதே, அது கடந்து வந்த பாதையை, தன்னம்பிக்கையை பார் என்றேன். எந்த பள்ளியிலும் ஆசிரியர்களோ, சக மாணவர்களோ, குழந்தைகளை உருவக் கேலி செய்து அழைக்காதீர்கள்; அது, அந்த குழந்தைகளை மனரீதியாக காயப்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.