நீட் தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை வலியுறுத்தும் தீர்மானத்தை, தமிழக அரசு கைவிட வேண்டும். தேசிய மருத்துவ ஆணைய சட்டம், 2019ன் பிரிவு 14ன் கீழ், நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது.
இதன் அரசியல் சட்ட அங்கீகாரத்தையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனவே, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் அடிப்படையில் மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியாது.
நீட் தேர்வு அறிமுகம் செய்வதற்கு முன், பல்வேறு மாநிலங்கள், பல்கலைகள் தனித்தனியாக நுழைவுத்தேர்வுகளை நடத்தின. தற்போது ஒரே தேர்வு நடத்துவதால், மாணவர்களின் நேரம், பணம், முயற்சி உள்ளிட்டவை மிச்சமாகின்றன. நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் சேருவதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது.
நுழைவுத்தேர்வு, மாணவர்களின் தகுதியை மதிப்பிடுவது. இடஒதுக்கீடு, இடங்களை ஒதுக்கீடு செய்வது. இரண்டும் வெவ்வேறானவை. தமிழகத்தின் இடஒதுக்கீட்டு கொள்கையை தொடர்ந்து செயல்படுத்த முடியும்.
நீட் தேர்வு கடினமானது என்ற பொதுவான கருத்து தவறானது. தமிழக மாணவர்கள் திறமையானவர்கள். ஆனால் அரசு பள்ளி, கிராமப்புற மாணவர்களுக்கு தேவையான கல்வி வாய்ப்புகளும், பயிற்சிகளும் கிடைக்கின்றனவா என்பது தான் முக்கியம்.
அரசு பள்ளிகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு போதிய ஆசிரியர்கள் உள்ளனரா; முறையான ஆய்வக வசதிகள் உள்ளனவா; மாணவர்களுக்குப் பாடங்களை புரிந்து கற்கும் வகையில் கற்பித்தல் நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
தனியார் பயிற்சி மையங்களை நம்பியிருக்க வேண்டிய நிலையை மாற்றி, அரசு பள்ளிகளிலேயே தரமான பயிற்சியை வழங்க வேண்டும். மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியடைவதால் தற்கொலை செய்து கொள்வதை ஒரு தேர்வுடன் மட்டும் தொடர்புபடுத்திவிட முடியாது. அதற்கு, குடும்ப எதிர்பார்ப்பு, பொருளாதார நெருக்கடி, மனநலப் பிரச்னைகள் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். எனவே, மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனையும் மனநல ஆதரவும் வழங்கப்பட வேண்டும்.
அரசுக்கு பரிந்துரைகள்
* கற்பித்தல் தரத்தை மேம்படுத்துதல்
* சிறப்பு, மேம்படுத்தப்பட்ட பயிற்சி அளித்தல்
* ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி வழங்குதல்
* நுழைவுத்தேர்வுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்
* மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குதல்
* தனியார் கல்லுாரி சேர்க்கை, கட்டணத்தை முழுமையாக கண்காணித்தல்
* பிரத்யேக சுதந்திர கண்காணிப்பு குழு அமைத்தல்
-
பாலகுருசாமி,
முன்னாள் துணைவேந்தர்,
அண்ணா பல்கலை

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.