பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது. மொழித்தாள் தேர்வை மிக எளிதாக சந்தித்த மாணவர்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் வணிகவியல் தேர்வுகள் எழுதியபோது, சற்று தடுமாற்றம் அடைந்துள்ளனர்.
ஒரு மதிப்பெண் கேள்விகள் யோசிக்க வைத்ததால், சென்டம் பெறுவோர் எண்ணிக்கை குறையும் என ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 5 முதல் நடந்து வருகிறது. தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் மிகவும் எளிதாக இருந்தன. காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு, முந்தைய ஆண்டு பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் இடம் பெற்றிருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் 2 ஒரு மதிப்பெண் வினாக்கள், மென்பொருள் பயன்பாடு சம்பந்தமாக கேட்கப்பட்டிருந்தது; வழக்கமாக, பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் கூட, இக்கேள்விகளுக்கு விடையளிக்க திணறினர். இதன் காரணமாக, சென்டம் குறைய வாய்ப்பு இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
நேற்று, வணிகவியல் தேர்வு நடந்தது. 10 மற்றும் 5 மதிப்பெண் பிரிவில், இதுவரை கேட்கப்படாத கேள்விகள் இடம் பெற்றிருந்தன. இத்தேர்விலும், ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தின. பாடத்தொகுப்பில் இருந்து கேள்விகள் இடம் பெற்றிருந்ததால் திணறினர்.
கடந்தாண்டு, கணிதத்தில் 3,882; இயற்பியலில் 2,710; வணிகவியலில் 2,581; கணக்கு பதிவியலில் 2,403 பேர் சென்டம் பெற்றனர். ஒவ்வொரு கல்வியாண்டிலும் சென்டம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நடப்பாண்டு சற்று குறைய வாய்ப்பிருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். சென்டம் பெற உதவும் ஒரு மதிப்பெண் வினாக்கள், மாணவர்களை அதிகளவில் யோசிக்க வைக்கிறது.
கல்வித்துறையினர் கூறியதாவது: தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு, ஒரு மதிப்பெண் வினாவுக்கு வாருங்கள் என மாணவர்களிடம் ஆசிரியர்கள் தெரிவிப்பது வழக்கம். முதலில் ஒரு மதிப்பெண் வினாவை படிப்பவர்கள் தேர்வு கஷ்டம் என எண்ணுவர். கடைசியாக ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு பதில் எழுதும்போது, பதற்றத்தில் அவர்களால் யோசிக்க முடிவதில்லை.
கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், வேதியியல், இயற்பியல், புள்ளியியல், கணக்கு பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள் அடுத்தடுத்து நடக்க உள்ளன. இத்தேர்வுகள் எப்படி இருக்கும் என்பது கூடுதல் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
வணிகவியல் தேர்வெழுதிய மாணவர்கள் கூறியதாவது:
திவ்யா, ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளி: 5 மதிப்பெண் வினாக்களில் 4, யோசித்து எழுதும் வகையில் இருந்தது. 10 மதிப்பெண் வினாக்கள் கஷ்டம்; தேர்வு செய்து எழுதும் வகையில் இருந்தபோதிலும், புத்தகத்துக்குள் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
நந்தினி, ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளி: ஒரு மதிப்பெண் வினாக்கள் கஷ்டம். பாடங்களுக்கு பின்புறம் இருக்கும் கேள்விகளை தவிர்த்து, பாடத்தொகுப்பில் இருந்து கேள்விகள் இடம் பெற்றிருந்தன. அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. இருப்பினும், குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வை எழுதி முடித்தேன்.
சிலம்பரசன், நஞ்சப்பா மேல்நிலைப்பள்ளி: இதற்கு முந்தைய பொதுத்தேர்வு வினாக்களை தேர்வு செய்து படித்திருந்தோம். மீண்டும் மீண்டும் கேட்கக்கூடிய கேள்விகள் குறைவாக இடம் பெற்றிருந்தன. திருப்புதல் தேர்வில் இடம் பெற்றிருந்த கேள்விகள் இதிலும் கேட்கப்பட்டன. புத்தகம் முழுவதும் படித்திருந்தால், பிரச்னையில்லை; அவர்களுக்கு தேர்வு ஈஸி.
ஸ்ரீசூர்யா, நஞ்சப்பா மேல்நிலைப்பள்ளி: 5 மதிப்பெண், 10 மதிப்பெண் வினாத்தாள் எளிதாக இருந்தது; ஒரு மதிப்பெண் வினா கஷ்டம். இதற்கு முன் கேட்காத கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன. புத்தகத்தில் இருந்துதான் கேட்கப்பட்டிருந்தன. அவுட் ஆப் போர்ஷன் இல்லை; புத்தகம் முழுவதையும் படித்து இருந்தால், 150 முதல் 180 மதிப்பெண் பெறலாம்.
ரேவதி, ஆசிரியை, வித்ய விகாஸ் பள்ளி: காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அதிகளவில் இடம் பெறவில்லை. யோசித்து விடையளிக்கும் வகையில் வினாத்தாள் அமைந்திருந்தது. சென்டம் எண்ணிக்கை குறையும். அதே சமயம், அட்டை டூ அட்டை படித்திருக்கும் மாணவர்கள், நல்ல மதிப்பெண் பெறுவர்.
வணிகவியல் தேர்வு மாணவர்கள் யோசிக்கும் வகையில் வினாத்தாள் அமைந்திருந்தாலும், புவியியல், மனையியல் தேர்வில் ஒரு மதிப்பெண், கட்டுரை வினாக்கள் எளிதாக இருந்ததாக, அத்தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
திருத்தும் பணி துவக்கம்: விடைத்தாள் திருத்தும் மையம், தாராபுரம் பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் லிட்டில் பிளவர் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதன்மை தேர்வர்கள் 40 பேர், தமிழ் மற்றும் ஆங்கிலம் விடைத்தாள் மதிப்பிடும் பணியை நேற்று துவக்கினர். கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "வரும் 31க்குள் மொழித்தாள்களை திருத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய தேர்வுகளின் விடைத்தாள், மையங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன; அப்பணி விரைவில் துவங்கும்" என்றனர்.
தேர்வுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "யாருடைய விடைத்தாள் என்பது தெரியாமல் இருக்க, ரகசிய குறியீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருத்தும் பணியில் எவ்வித குழப்பமும் ஏற்படாது. தேர்வு மைய கண்காணிப்பாளர், மாணவர்கள் விடைத்தாளில் எந்த குறியீடு இடக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடித்து எழுதியிருந்தால், "தன்னால் அடிக்கப்பட்டது என்பதை எழுதி, கையொப்பமிட மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதால், அவ்வாறு யாரேனும் செய்துள்ளனரா என்பது குறித்தும் கண்காணிக்கப்படுகிறது" என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.