நியூட்ரினோ தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக, ஜப்பான் விஞ்ஞானி டகாகி கஜிடா மற்றும் கனடா நாட்டு விஞ்ஞானி ஆர்தர் பி.மெக்டொனால்ட் ஆகியோர், 2015-ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை வென்றுள்ளனர்.
பிரபஞ்ச உருவாக்கத்தின் அடிப்படை மூலக்கூறு அல்லது அணுத்துகளாக கருதப்படும் நியூட்ரினோவின் ஊசலாட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் நியூட்ரினோக்களுக்கு நிறை உண்டு என்பதை இவர்கள் கண்டுபிடித்ததற்காக, இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் அகாடமியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டகாகி கஜிடா என்பவர் ஜப்பானிய விஞ்ஞானி, ஆர்தர் பி.மெக்டொனால்ட் என்பவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர். பிரபஞ்ச உருவாக்கத்தின் அணுக்கோட்பாட்டில் நியூட்ரினோக்கள் பற்றி அதிகம் ஆய்வுகள் நடைபெற்ற வண்ணம் இருந்தன. ஆனாலும் நியூட்ரினோ என்ற நிகழ்வு ஒரு புரியாத புதிராகவே இன்றும் இருந்து வருகிறது.
பிரபஞ்ச உருவாக்க சக்திகளில் மூலக்கூறு அல்லது அடிப்படை துகள்கள் நியூட்ரினோக்கள் என்று அழைக்கப்படுகிறது. கதிர்வீச்சு அழிவு மூலக்கூறுகளால் நியூட்ரினோக்கள் உருவாகின்றன.
எஃப். ரெய்னிஸ் என்ற விஞ்ஞானி நியூட்ரினோ பற்றி கூறும்போது, “மனிதனால் இதுவரை கற்பனை செய்யப் பட முடியாத ஒரு மிக மிக சிறிய அளவு துகள்” என்றார். எலெக்ட்ரான்கள் போலவேதான் நியூட்ரினோக்கள் என்றாலும் மிக முக்கியமான வித்தியாசம் இரண்டுக்கும் இடையே உள்ளது. நியூட்ரினோக்கள் மின்சக்தியை சுமந்து செல்லக் கூடியதல்ல. எனவே எலெக்ட்ரான்கள் போல் இவை மின்காந்த சக்திகளினால் தாக்கமோ, பாதிப்போ அடைவதில்லை.
இதுவரை நியூட்ரினோக்களை 3 வகையாக பிரித்துள்ளனர். பிரபஞ்சத்தில் பொருட்களின் மிகவும் உள்ளார்ந்த, புலப்படா, செயல்பாடுகள் பற்றிய நமது புரிதலை டகாகி கஜிடா மற்றும் மெக்டொனால்ட் ஆகியோரது கண்டுபிடிப்புகள் மாற்றிவிட்டது என்று நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
சாதாரண மொழியில் கூற வேண்டுமெனில், நியூட்ரினோக்கள் தங்களது அடையாளங்களை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது என்பதும், இந்த உருமாற்றத்திற்கு நியூட்ரினோக்களுக்கு நிறை இருந்தால்தான் இது சாத்தியம் என்பதையும் இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது, இதுவரையிலான ஆய்வுகள் நியூட்ரினோக்களுக்கு நிறை இருக்க வாய்ப்பில்லை என்றே கருதியது. ஆனால் அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதன் அடையாளங்கள் மாறும் தன்மை கொண்டதால் நிறை இருப்பது அவசியமாகிறது என்பதுதான் இப்போதைய கண்டுபிடிப்பின் சிறப்பாகும்.
பிரபஞ்ச கதிர்வீச்சு மற்றும் பூமியின் வெளி ஆகியவற்றின் ஊடியக்கங்களினால் பல நியூட்ரினோக்கள் உருவாகின்றன. மேலும் பல நியூட்ரினோக்கள் சூரியனின் உட்பகுதியில் நிகழும் அணு ஊடியக்கங்களினால் உருவாகிறது. ஒவ்வொரு விநாடியும் ஆயிரம் பில்லியன்கள் கணக்கான நியூட்ரினோக்கள் நமது உடலினூடே சென்ற வண்ணம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பிரபஞ்ச உருவாக்கம், அதில் பொருட்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை மாற்றி அமைக்கும் கண்டுபிடிப்பாக இவர்களது கண்டுபிடிப்புகள் கருதப்படுகிறது.
தொடர்புடையவை
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.